இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு தொடர்வதால் மீண்டும் நூல் விலை ரூ.7 உயர்வு: 5 மாதத்தில் ரூ.41 அதிகரிப்பால் தொழிற்துறையினர் கடும் அதிர்ச்சி

திருப்பூர்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஒன்றிய அரசு வரி விலக்கு அளிக்காமல் உள்ளதால் மீண்டும் நூல் விலை 7 ரூபாய் உயர்ந்திருப்பது தொழிற்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூரில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயத்த ஆடைகளில் சுமார் 68 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது. ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவது துணி நூல். பருத்தி விலையை பொறுத்து நூல் நிலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த ஆண்டு துவக்கத்தில் நூல் விலை உயர்வடைந்தது. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பருத்தி விலை குறைந்தது.

நூல் விலையில் மாற்றம் இல்லாமல் சராசரி விலையில் இருந்து வந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடைந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வரி விதிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக உள்நாட்டு பருத்தியும் கேண்டி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை விலை உயர்ந்தது. கடந்த பிப்ரவரியில் நூல் விலை 7 ரூபாய் உயர்ந்திருந்தது.

தொடர்ந்து மார்ச் மாத தொடக்கத்தில் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் மார்ச் 16ம் தேதி மேலும் 7 ரூபாயும், ஏப்ரல் 1ம் தேதி 10 ரூபாயும், 16ம் தேதி மீண்டும் அனைத்து ரக நூல்களுக்கும் 10 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மே மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளன. அதன்படி அனைத்து ரகங்களுக்கும் 7 ரூபாய் உயர்த்தி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதத்தில் மட்டும் நூல் விலை 41 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பாலிஸ்டர் நூல் மற்றும் துணிகளின் விலை உயர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் மீண்டும் நூல் விலை உயர்வடைந்துள்ளது தொழிற்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தரமான பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதே இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நடப்பாண்டு துவக்கத்தில் 356 கிலோ கொண்ட பஞ்சு கேண்டி விலை 50 முதல் 55 ஆயிரம் வரை இருந்த நிலையில், தட்டுப்பாடு காரணமாக தற்போது கேண்டி பஞ்சு 65 ஆயிரம் முதல் 72 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதன் காரணமாகவே தற்போது பஞ்சு விலை ஏற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். விலை உயர்வு காரணமாக 10ம் நம்பர் கோம்டு நூல் கிலோ ரூ.224க்கும், 16ம் நம்பர் ரூ.234க்கும், 20ம் நம்பர் கோம்டு நூல் ரூ.292க்கும், 24ம் நம்பர் ரூ.304க்கும், 30ம் நம்பர் ரூ.314க்கும், 34ம் நம்பர் ரூ.334க்கும், 40ம் நம்பர் ரூ.352க்கும், 20ம் நம்பர் செமி கோம்டு ரூ.289க்கும், 24ம் நம்பர் ரூ.297க்கும், 30ம் நம்பர் ரூ.300க்கும், 34ம் நம்பர் ரூ.323க்கும், 40ம் நம்பர் ரூ.342க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

Related Stories: