கோபி: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இதுதான் கடைசி தேர்தல் என்று செங்கோட்டையன் காட்டமாக கூறியுள்ளார். தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று கோபியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பெரும்பான்மையாக திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என வந்துள்ளதே என்ற கேள்விக்கு, வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் முதல் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றார்.
நயினார் நாகேந்திரன் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என சொல்லி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரனுக்கு இதுதான் இறுதித்தேர்தல். இதற்கு பிறகு கட்சி பதவி அவருக்கு இருக்குமா? என்பதை மேலிடம் சொல்லும். என்றார். வெற்றி பெறக்கூடிய தவெக வேட்பாளர்கள் பனையூர் வரவேண்டும் என விஜய் கூறியிருக்கின்றாரே என்ற கேள்விக்கு, இது அனைத்து கட்சிகளும் செய்யக்கூடிய ஒரு செயல்தான். அதிமுகவில் இருந்த போது நாங்கள் ரிசார்ட்டில் 22 நாட்கள் இருந்திருக்கின்றோம்.
அந்த மாதிரி சென்று விடக்கூடாது என்பதற்காக அல்ல. எங்களிடம் இருப்பவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். தெளிவாக மட்டுமல்ல, விஜய்க்காக உயிரையும் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். 180 முதல் 200 தொகுதிகள் தவெக வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களுடன் ஆட்சி அமைக்கும். அதுதான் தமிழ்நாட்டின் இலக்காகவும் மக்களின் மனநிலையாகவும் இருக்கிறது. இதுவரை காணாத காட்சி வியக்கத்தக்கதாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
