வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக மனு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதவ் அர்ஜுனா தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்கு முன்னதாக, சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் நோக்கத்துடன் சில சமூக விரோத சக்திகள் செயல்பட்டு வருவதை, தங்களின் அவசரக் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள தவெக கட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையை அமைதியற்றதாக்கும் உள்நோக்கத்துடனும், எங்களது கட்சியின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் சட்டமன்ற வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் கடமைகளை செய்வதை தடுக்கும் நோக்கத்துடனும், சமூக விரோத சக்திகள் இதுபோன்ற வன்முறைச் செயல்களை திட்டமிட்டு வருவதாக, இன்று காலை முதல் எங்களுக்கு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

எனவே, மொத்தம் உள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதை தடுத்திடவும், அம்மையங்களில் எங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் தவெக கட்சி முகவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்திடவும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உரிய அதிகாரிகளுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் போதுமான எண்ணிக்கையிலான ஆயுதமேந்திய காவல்துறை பாதுகாப்பை நியமித்திட வேண்டும். மேலும், 62 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகிலும் பொதுமக்கள் கூடுவதை தடுத்து, ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: