சென்னையில் உள்ள 16 தொகுதிகளின் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்படும்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள 16 தொகுதிகளின் வாக்குகள் மூன்று மையங்களில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 16 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதற்காக லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் என மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று மையங்களில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகிறது.

அதன்படி ஆர்.கே.நகர், திரு.வி.நகர், துறைமுகம், ராயபுரம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளின் வாக்குகள் லயோலோ கல்லூரியிலும், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் தொகுதிகளின் வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளின் வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துணை ராணுவப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் உள்ளூர் காவல் துறையினர் என சுமார் 1,160 பாதுகாப்பு பணியாளர்கள் 24X7 கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் பகுதிகள், 320க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. சென்னையில் சுமார் 83.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2021-ஐ விட அதிகம், குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதியில் 90.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்ல க்யூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 16 தொகுதிகளின் இயந்திரங்களும், அந்தந்த மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: