சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் அறிக்கை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை கள்ள மனம் காத்த மோடி அரசு தேர்தல் முடிந்தவுடன் ஒரே அடியாக சிலிண்டர் விலையை 990 ரூபாய் அளவிற்கு உயர்த்திருக்கிறது. ஏற்கனவே 2246 ரூபாய் விற்ற சிலிண்டர் விலை தற்போது 3237 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து விலைவாசிகளும் உயர்வதற்கு வாய்ப்பாகிவிடும். குறிப்பாக தேநீர் கடை, ஓட்டல் போன்ற உணவு நிறுவனங்களின் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அபரீதமாக உயரும் அபாயம் உள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற கோடிக்கணக்கான அமைப்புசாராத் தொழிலாளர்கள் தேநீரையும், மதிய உணவிற்கு ஓட்டல்களையும் நம்பி உள்ளவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாவார்கள். உணவு நிறுவனங்கள் மூடக்கூடிய பேராபத்து ஏற்படும். தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடிய அபாயம் நேரும். இவற்றையெல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காத மோடி அரசு மேற்காசிய போரை காரணம் காட்டி விலையை உயர்த்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.
இந்நிலையில் விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்படும் பேராபத்து நிலவி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த பொருளாதாரம் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உணவு நிறுவனங்கள், அதில் பணியாற்றும் தொழிலாளர்கள், தேநீர் மற்றும் ஓட்டல் உணவுகளை மட்டுமே நம்பி உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர் போன்றவர்களை கருத்தில் கொண்டு ஏற்றப்பட்ட விலையை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
