நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், கோட்டாவில் பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் ஏராளமான போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி மையங்களில் நீட் உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவியர் இங்கு வந்து தங்கி போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இதனையடுத்து நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த தீட்சித் ராஜேஸ்வரி (வயது 20) என்ற மாணவன் கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தானின் கோட்டாவில் தங்கி இருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.

அவர் இன்று காலை தங்கி இருந்த விடுதியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தீட்சித்தை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு தீட்சித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தீட்சித் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாகவும், இதனால் அவர் விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: