செல்போனில் இன்று அதிர்வுடன் எச்சரிக்கை ஒலி வரும் என்பதால் அச்சம் வேண்டாம்: தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தல்

டெல்லி: இன்று (மே 2) உங்களின் செல்ஃபோன்களுக்கு அதிக சத்தத்துடன் மெசேஜ் வந்தால் அது குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மழை வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை எச்சரிப்பதற்கான Cell Broadcast சேவையை இன்று நாடு முழுவதும் சோதனை செய்வதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நமது நாட்டில் எமர்ஜென்சி காலத்தில் பொதுமக்களிடம் சரியான நேரத்தில் எச்சரிக்கையை கொண்டு செல்லும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி அவசரக்கால தகவல் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று நாடு தழுவிய அளவில் ‘செல் பிராட்காஸ்ட்’ (Cell Broadcast) எச்சரிக்கை அமைப்பைச் சோதனை செய்கிறது. இன்று உங்கள் மொபைல் போனில் திடீரென ஒரு எச்சரிக்கை செய்தி வரலாம். அதனுடன் ஒரு பெரிய சத்தமும், அதிர்வும் ஏற்படலாம். இதைப் பார்த்து அதிர்ச்சியடையத் தேவையில்லை. இது ஒரு சோதனை மட்டுமே என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுக்க எமர்ஜென்சி காலத்தில் பொதுமக்களை தொடர்பு கொள்ளும் அமைப்பைத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சோதனை செய்யும் நிலையில், இதன் காரணமாகவே உங்களுக்கும் செல்போனில் அலர்ட் மெசேஜ் வரும். டெல்லி உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. அதேநேரம் எல்லைப் பகுதிகள் மற்றும் தேர்தல் மாநிலங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: