கார் மோதி 2 மூதாட்டிகள் பலி குடியாத்தம் அருகே சோகம் 100 நாள் வேலைக்கு சென்று திரும்பியபோது

குடியாத்தம் பிப். 26: குடியாத்தம் அடுத்த செங்குன்றம் கிராமம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் வசந்தா(60), பூசனஅம்மாள்(60). இவர்கள் தீர்த்தமலை கோயில் செல்லும் வழியில் 100 நாள் திட்டத்தின் கீழ் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர். பின்னர் பணி முடிந்து மாலை 3 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக கட்டிடம் அருகே வந்தபோது குடியாத்தத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் மூதாட்டிகள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அப்பகுதி மக்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வேகமாக சென்ற காரை அவ்வழியாக சென்றவர்கள் பின் தொடர்ந்து சென்று குடியாத்தம் அடுத்த மோர்தனா செல்லும் சாலையில் மடக்கி பிடித்து குடியாத்தம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் டிஎஸ்பி ஸ்ரீதரன் உத்தரவின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் காரை ஓட்டிச் சென்றவர் கே.ஜி.எப் பகுதியை சேர்ந்த மகேஷ்(25) என்பதும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றதும் தெரிந்தது. மகேஷை பிடித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>