சென்னை: இம்மாதத்தில் மட்டும் தமிழகத்தின் மின் தேவை 3வது முறையாக புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 21,211 மெகாவாட் வரை அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரித்துள்ளதால் வீடுகளில் எந்த நேரமும் மின் விசிறிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இரவு நேரங்களில் ஏசி பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தின் தினசரி மின்சார தேவை சரசரியாக 16 ஆயிரம் மெகாட் என்ற அளவில் இருக்கும்.
கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின் தேவை அதிகரிகரிக்கும். கோடை காலத்துக்கு முன்பாக தமிழகத்தில் அதிகபட்ச மின் தேவை, கடந்த 2024ம் ஆண்டு மே 2ம் தேதி 20,830 மெகாவாட்டாகவும், அதிகபட்சம் மின் நுகர்வு 2024ம் ஆண்டு ஏப்.30ம் தேதி 454.32 மில்லியன் யூனிட்கள் பதிவானது. தமிழகத்தில் கத்திரி வெயில் வரும் மே 4ம் தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்திலே வெயில் சுட்டெரித்து வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி பின் இந்த ஏப்ரல் மாதத்திலேயே 3 முறை அதிகபட்ச மின் தேவை மற்றும் மின் நுகர்வு பதிவாகியிருக்கிறது. மின் தேவையை பொறுத்தவரை கடந்த 17ம் தேதி 21,010 மெகாவாட்டாகவும், 22ம் தேதி 21,051 மெகாவாட்டாகவும் பதிவான நிலையில் நேற்று முன்தினம் 21,211 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதேபோல், மின் நுகர்வு கடந்த 18ம் தேதி 462.66 மில்லியன் யூனிட்களாகவும், ஏப்.23ம் தேதி 466.16 மில்லியன் யூனிட்களாகவும் பதிவான நிலையில் நேற்று முன்தினம் 470.67 மில்லியன் யூனிட்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே 3வது முறையாக மின் தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மாதம் கத்திரி வெயில் தொடங்கும் போது இந்த அளவுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து இடங்களிலும் ஏசி பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது, இதனால் மதிய நேரத்தில் மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கிறது. மேலும் இரவு நேரங்களிலும் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் தேவை மற்றும் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. வெயிலினால் மின் தேவை அதிகரித்தாலும், அந்த தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்ய சூரிய சக்தியே உதவுகிறது. நேற்று முன்தினம் பதிவான மின் தேவையை விட மொத்த மின் உற்பத்தி அதிகமாகவே இருந்தது,’’ என்றனர்.
