ரசாயனம் கலந்த மாம்பழம் விற்றால் ரூ.5,000 அபராதம்: கடை உரிமம் ரத்து செய்யப்படும்: உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

சென்னை: உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதித்து, உரிமம் ரத்து செய்யப்படும், என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு வகையான மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த மாம்பழங்களை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்கை முறையில் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கக் கூடாது என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

மேலும், அதிக லாபத்துக்காக ரசாயன முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், மாம்பழ விற்பனையாளர்கள் இயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், என்று உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. விதிமீறல் தொடர்பாக, வரும் நாட்களில் மார்க்கெட்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

ஆய்வின்போது ரசாயன முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே விதிமீறலில் ஈடுபட்டால், கடையின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

Related Stories: