டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகார் விசாரணை சிபிஐக்கு மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த 2021 முதல் 2023ம் வரையிலான காலகட்டத்தில் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அறப்போர் இயக்கத்தின் தரப்பில், ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்டதால் தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. அதிமுக நிர்வாகி சரவணன் தரப்பில், அமைச்சர், மின் வாரிய உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

டான்ஜெட்கோ தரப்பில், அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இருவரும் அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள், ஒப்பந்தத்தில் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே விலையை குறிப்பிடுவது என்பது 1987ம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறை என்று வாதிடப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், விசாரணையில் குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லாததால், புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு துறை 2 வாரங்களில் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்பு துறை, டான்ஜெட்கோ ஆகியோர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், வழக்கை சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கு தானே தவிர, குற்றச்சாட்டுக்களின் தகுதி குறித்த முடிவாக கருதமுடியாது. இந்த கருத்துக்கள் யாருக்கும் எதிரானவையாக கருத முடியாது என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Related Stories: