கோடைகாலமும் உணவும்

நன்றி குங்குமம் தோழி

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அந்த நேரங்களில் உடலுக்கு தேவையான உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

* இன்றைய சூழலில் ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை. அதில் சமைத்த, சமைக்காத உணவுப் பொருட்களையோ நிரப்பி வைக்கின்றோம். இரண்டு நாட்களுக்கு முந்தைய உணவுகள் ஃபிரிட்ஜில் இருந்தாலும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. துர்நாற்றம் வீசினால் மட்டும்தான் கெட்டுப்போய் விட்டதாக அர்த்தமில்லை. வெளிப்படையாக கெட்டுப் போய் விட்டதாக தெரியாது. அந்த உணவினை உட்கொள்ளும் போது டயரியா மற்றும் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது.

* ஃபிரிட்ஜில் வைக்கும் உணவினை மறுநாளே பயன்படுத்திவிடுவது நல்லது. நீண்ட நாட்கள் வைக்கக் கூடாது. காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அன்றே வாங்கி அன்றே பயன்படுத்துவது சிறந்தது.

* கோடைகாலத்தில் அதிக நீர் இழப்பு ஏற்படும். இதனால் பொட்டாசியம், மினரல்ஸ் போன்றவைகள் அதிக இழப்பு ஏற்படும். அதனை ஈடு செய்ய அதிக சத்துள்ள பழச்சாறுகளை சாப்பிட வேண்டும்.

* தாகத்தை தணிக்க குளிர்பானங்களை குடிக்கின்றார்கள். இவை செயற்கை இனிப்பூட்டிகளை கொண்டு தயார் செய்கின்றனர். இப்படிப்பட்ட இனிப்பூட்டிகளால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்படும்.

* குளிர்பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகளால் தாகம் தணியாது. ஆனால், உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் என்ற ஹார்மோனின் உற்பத்தியை குறைத்து சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது. சீரகம் கலந்த தண்ணீர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* தினமும் குறைந்தது 2 லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் ‘பி’ மற்றும் மெக்னீசியம் சத்துக் குறைவினால் சிறுநீரகக் கல் உற்பத்தியாகும். எனவே, அதிக சத்துள்ள பழம் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

* அசைவ உணவு, சாக்லேட், குளிர் பானம், மது போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. கேரட், திராட்சை, ஆரஞ்சு மற்றும் மாதுளை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

* கோடை காலத்தில் சுகர், பிரஷர் மற்றும் பல்வேறு நோயுள்ளவர்கள் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். வெப்பத்தில் இருந்து தப்பிக்க குடையை பயன்படுத்தலாம். கருப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டதால் அந்த நிற குடையினை தவிர்ப்பது நல்லது.

தொகுப்பு: எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.

Related Stories: