ராஜ்மா பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பீன்ஸ் வகைகள் பல உண்டு. இதில் ராஜ்மா (Kidney Beans) நம் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. ராஜ்மாவில் வெள்ளை கிட்னி பீன், சிவப்பு கிட்னி பீன் என்று பல வகைகள் உள்ளது. மேலும் ஊதா நிற மற்றும் கருப்பு நிற பீன் வகைகளும் உண்டு. ராஜ்மா, புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ஒரு சிறந்த ஆரோக்கிய உணவு. இது செரிமானத்தை மேம்படுத்துதல், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல் மற்றும் உடல் எடை குறைத்தல் மேலும், எலும்புகளை வலுவாக்கி, தசை வளர்ச்சிக்கும் தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஒரு கப் பீன்ஸில் தினசரி தேவைக்கான ஊட்டச்சத்தில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக கொண்டுள்ளது.

வேகவைத்த ராஜ்மா சத்துக்கள் – 100 கிராம்
புரதம் – 8.9 கிராம்
நார்ச்சத்து – 6.7 கிராம்
இரும்புச்சத்து – 2.9 மில்லிகிராம்
பொட்டாசியம் – 403-405 மில்லிகிராம்
மெக்னீசியம் – 45 மில்லிகிராம்
ஃபோலெட் – (பி9) – 130 மில்லி கிராம்.

ராஜ்மாவின் நன்மைகள்

புரதம் நிறைந்த பருப்பு வகைகள், பயறு வகைகள் என எல்லாமே உடலுக்கு தேவையான ஒன்று. இந்த பருப்பு வகைகளில் கிடைக்கும் புரதங்கள் தாவரங்களில் இருந்துதான் பெரும்பாலும் பெறப்படுகிறது. அந்தவகையில், ராஜ்மாவும் தாவர வகை உணவுதான். ராஜ்மா ஒரு முழுமையான சத்து நிறைந்த உணவாகும். இது எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவும் கூட. ராஜ்மாவை சரியான முறையில் சமைத்து அளவாக சாப்பிட்டால் உடல் நலம், இதயம், செரிமானம் மற்றும் ஆற்றல் அனைத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உணவில் சேர்க்கும் முறைகள்

ராஜ்மா கிரேவி, சாலட், சுண்டல், சூப் மற்றும் அடை, பருப்பு குழம்பு போன்றவை செய்யலாம். சைவ பிரியர்களுக்கு ராஜ்மா ஒரு சிறந்த புரத ஆதாரமாகும். தசை வளர்ச்சிக்கும் உடல் பலத்துக்கும் உதவும்.இரும்புச்சத்து இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவுகிறது. ராஜ்மாவைச் சமைப்பதற்கு முன்பு 8-10 மணி நேரம் ஊற வைத்து, பின்னர், நன்கு வேகவைத்த பின்பே உண்ண வேண்டும். பச்சையாகவோ, அரை வேக்காட்டிலோ வேக வைத்து உண்டால், அது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். நன்கு வேக வைத்த பின்உண்டால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

ஆன்டிஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் சி இருப்பதால் நோய்களின் அபாயத்தை தடுக்க இயலும். வெள்ளை ரத்த அனுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க செய்கிறது. வெளியிலிருந்து உடலுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் நோய்க் கிருமிகளை எதிர்ப்பதோடு உடலில் கொலஜன் உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

கண்களுக்கு நன்மை அளிக்கிறது

ராஜ்மாவில் இருக்கும் கரோட்டின் அளவு உடலில் வைட்டமின் ஏ ஆக உடைகிறது. பொதுவாகவே கண்களின் ஆரோக்கியத்துக்கு கிட்னிபீன்ஸ் உகந்தது. இதில் இருக்கும். வைட்டமின் -ஏ கண்களின் விழித்திரையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை சமன்படுத்துகிறது. மேலும், மாஸ்குலர் சிதைவு மற்றும் கண் புரை வளர்ச்சியை தடுக்க உதவுகிறது

புற்றுநோயைத் தடுக்கிறது

ராஜ்மா புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் ராஜ்மா உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வெள்ளை கிட்னி பீன்ஸ்களிலும் எலக்டின் நிறைந்துள்ளது. இது செல்களின் பெருக்கத்தில் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் எடை குறைப்பு

குறைந்த கிளைசெமிக் குறியீடு (19-29) கொண்டது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்திருப்பதால் நீண்ட நேரம் பசி உணர்வைக் கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. ராஜ்மா நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களையும் பேரூட்டச் சத்துகளையும் வழங்குகிறது.

Related Stories: