நன்றி குங்குமம் டாக்டர்
பேலியோவுக்கு மாறுங்கள்!
பேலியோ – பழைய என்ற சொல்லில் இருந்து தோன்றிய வார்த்தை. தொன்மையான உணவு என்று பொருள் கொள்ளலாம். விவசாயம் பல்கிப் பெருகும் காலத்திற்கு முன்பு மனித இனம் வேட்டையாடி இனமாக இருந்தது. அவர்கள் சாப்பிட்டது வேட்டையாடி கிடைத்த விலங்கின் மாமிசம். அந்தந்த இடங்களில் அந்தந்த கால சூழ்நிலையில் கிடைக்கும் பழங்கள் பெர்ரி வகைகள், மூலிகைகள் போன்றவற்றை உட்கொண்டு வந்தனர்.
அதற்குப் பின்பு ஓரிடத்தில் தங்கி விவசாயத்தின் மூலம் விளைந்த பயிர்களையும் கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைத்த பால் , மாமிசத்தை சாப்பிட்டு வந்தனர். இந்த மாற்றத்தால் நீரிழிவு ரத்தக் கொதிப்பு உடல் பருமன் இதய நோய் போன்ற தொற்றா நோய்கள் தோன்றி அதிகரித்தன. இதற்கு மாவுச்சத்தின் மீது விழ வேண்டிய பழியை கொழுப்பின் மீது சுமத்தி கொழுப்பு உணவை நிறுத்த வேண்டும். புரதச்சத்து கிட்னிக்கு ஆபத்து போன்ற கருத்துகள் மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டன.
மக்கள் தங்களின் உணவில் கொழுப்புச் சத்தையும் புரதச்சத்தையும் வெகுவாக குறைத்து அதற்கு ஈடு செய்ய மாவுச்சத்தை அதிகமாக சாப்பிட்டு வந்தனர். ஆயினும் பெருகிவரும் உடல் பருமன், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய் குறைந்தபாடில்லை.
இதை கருத்தில் கொண்டு மீளுருவாக்கம் பெற்றதே ‘குறை மாவு’ உணவு முறை எனும் சித்தாந்தம் உருவானது. இதற்கு பேலியோ எனும் பெயர் வைக்கப்பட்டது. இந்த உணவு முறை ஆதிமனிதனின் தொன்மையான உணவு முறையை ஒத்து இருந்தமையால் இந்தப் பெயர் பொருத்தமாகிவிட்டது.ஆயினும் அறிவியல் பூர்வமாக இந்த உணவு முறையை குறை மாவு (Low carbohydrate) நிறை கொழுப்பு (High FAT) ஆரோக்கியமான கொழுப்பு உணவை மட்டும் உண்ணச் சொல்வதால் நாம் இதை HEALTHY FAT எனலாம்.
நிறை புரதம் HIGH PROTEIN ( நாம் இதை APPROPRIATE PROTEIN என்ற உணவு முறையை அமைத்திருக்கிறோம்) இங்கு நீரிழிவு , ரத்த கொதிப்பு , உடல் பருமனுக்கு உள்ளாகும் ஏனைய நம் மக்களுக்கு எதனால் இவை வந்தன என்பது குறித்த அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லை என்பதே உண்மை நாம் உண்ணும் உணவு எத்தகையதாகினும் நமது உடலுக்கு அது கிரகிக்கப்படும் போது அதை நமது உடல் மாவுச்சத்து ( CARBOHYDRATES), புரதம் ( PROTEIN), கொழுப்பு ( FATS), என்று கிரகிக்கும்.
தானியங்கள் ( CEREALS / GRAINS),இனிப்பு நிறைந்த உணவுகள் ( REFINED SUGAR), இனிப்பு நிறைந்த திரவங்கள்( REFINED SUGAR ADDED DRINKS), பேக்கரி உணவுகள் போன்றவற்றில் அதிகமாக மாவுச்சத்து உள்ளது. பழங்களை விட காய்கறிகளில் மாவுச்சத்து குறைவாக உள்ளது.புரதச்சத்து மற்றும் கொழுப்பு என்பது மாமிசம், முட்டை, மீன், பயறு, கடலை, பால் & பால் பொருட்கள், நட்ஸ் வகைகளில் இருக்கிறது.
சராசரி தமிழர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் – தினசரி 300 கிராம் மாவுச்சத்து இதற்குக் காரணம் நமது வாழ்வியல். தானியங்களை முழுமையாக நம்பி இருப்பதால் தான் என்பதை அனைத்து சிந்திக்கும் மக்களும் உணர முடியும். இதனால் நீரிழிவு, நீரிழிவிற்கு முந்தைய நிலை, அதீத உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, பிசிஓடி போன்ற பல பிரச்சனைகளுடன் உள்ள மக்கள் மட்டுமே இந்த குறை மாவு உணவு முறையை நாடி வருகிறார்கள்.
இந்த பேலியோ உணவு முறை என்பது உடல் எடை குறைப்பு டயட் என்று கொள்ளலாமா?
இந்த உணவு முறையில் கிடைக்கும் பல பலன்களில் ஒன்று “உடல் எடை குறைப்பு” மற்றபடி இந்த உணவு முறையை வெறும் உடல் எடை குறைப்புக்காக மட்டும் என்று நோக்குவது அதன் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் செய்யும் விசயம் என்றே கூறுவேன். ஒருவருக்கு அதீத உடல் பருமன் ஏற்படுவதும், டைப் டூ நீரிழிவு ஏற்படுவதும் பிசிஓடி ஏற்படுவதும் அவரது உடலுக்குள் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் தன்மை ஏற்படுவதால் வருவதாகும். இந்த இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் என்பது தவறான உணவு முறையாலும் துளியும் உடல் உழைப்பின்மையாலும் ஏற்படுவது.
இதை சரி செய்யும் உணவு முறையில் இருக்கும் போது அதைத் தொடர்ந்து வாழ்வியலாக ஏற்று நம்மை மாற்றிக் கொள்வது தான் தொடர்ந்து இந்த பேலியோ வாழ்வியல் வழங்கும் நன்மைகளை அறுவடை செய்ய உதவுகிறது.
பேலியோ உணவு முறையை நீண்ட நாட்கள் கடைபிடிப்பது கடினம் என்று கூறப்படுகிறதே?
கடினம் என்று நினைத்தால் அனைத்துமே கடினம் தான். அதீத உடல் பருமனாக இருந்தவர்கள் பலர் பேலியோவுக்குள் நுழைந்து அதை வாழ்வியலாக சிறப்பாக கடைபிடிக்கும் போது உடல் பருமன் குறைந்திருப்பர். மீண்டும் அதிக தானியம் சார்ந்த உணவு முறைக்கும் இனிப்பு தரும் சீனி நாட்டுசர்க்கரை என்று மாறும் போதும் உடல் எடை கூடுவதைக் காண முடியும்.
இதற்குக் காரணம் – நம்மை சுற்றியுள்ள உலகம் பேலியோ கடைப்பிடிப்பதாக இல்லை சுற்றி எங்கு காணினும் இனிப்பு இனிப்பு இனிப்பு மட்டுமே எந்த உணவுப் பொருளும் தானியங்கள் நிரம்பிய மாவுச்சத்தால் செய்யப்பட்டவை மட்டுமே.
விருந்துகள் விருந்தோம்பல்களில் நீக்கமற நிறைந்திருப்பது தானியங்களும் இனிப்புகளும் மட்டுமே. இப்படியிருக்க நமக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு உணவு முறையை வாழ்வியலை கடைபிடிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆயினும், உலகமே கடைபிடிப்பதால் அதிக தானியங்கள் சாப்பிடும் முறையும். இனிப்பை அளவின்றி சாப்பிடுவதும் மது புகைக்கு அடிமையாக இருப்பதும் நன்மையென்று ஆகிவிடாது. மாவுச்சத்தை குறைத்து நல்ல புரதச்சத்தையும் நல்ல கொழுப்புச் சத்தையும் உண்ணும் போது நன்மைகள் பல கிடைக்கும்.
இந்த உணவு முறையை கைவிடும் போது மீண்டும் நாம் முன்பு சந்தித்த பல இன்னல்கள் நம்மை சந்திக்கும். இயன்றவரை குறை மாவு சித்தாந்தத்தை நன்றாக கற்றுக் கொண்டு கடைபிடிப்பவர்களும் தங்களுக்கு முன்பு இருந்த தொற்றா நோயின் கோரப்பிடியில் பல இன்னல்களைச் சந்தித்தவர்களும் இந்த வாழ்வியலை கைவிட மாட்டார்கள்.
அத்தகையோர் நம்மிடையே பலர் உண்டு. மேலும் பலர் இந்த வாழ்வியலை கைவிட்டு அதனால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதை எண்ணி மீண்டும் இந்த வாழ்வியலுக்கு வரும் கதைகள் ஏராளம். குறை மாவு உணவு முறையான பேலியோ எப்போதிருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது?
நீரிழிவிற்கு மருத்துவ சிகிச்சை கண்டறியப்படும் முன்பு வரை 18 ஆம் நூற்றாண்டில் இருந்தே மாவுச்சத்தை குறைப்பது தானியங்கள் உண்ணுதலைக் குறைப்பது புரதச்சத்து கொழுப்புச்சத்து உணவுகளை அதிகமாக உண்பது குறித்த தேடல்கள் மற்றும் பரிந்துரைகளை அறிவியல் மருத்துவர்கள் செய்தததைக் காண முடிகின்றது. டைப் ஒன்று நீரிழிவிற்கு இன்சுலின் கண்டறியப்படும் முன்பு வரை குறை மாவு உணவு முறை மட்டுமே சிகிச்சையாக இருந்தது. எந்த மருந்துக்கும் கட்டுப்படாத வலிப்பு நோய்க்கும் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை சிகிச்சையாக பரிந்துரைக்கப்பட்டது. பரிந்துரைக்கப்படுகிறது.
இப்படியாக குறை மாவு உணவு முறை என்பது தொடர்ந்து பல காலமாக மருத்துவர்களாலும் மக்களாலும் முயற்சி செய்யப்படுபவையே. இது அறிவியல்பூர்வமான வாழ்வியல் மாற்றம்.
பேலியோவில் இறைச்சி சாப்பிடப் பரிந்துரைக்கப்படுகிறது?
இது மாமிசம் உண்ணும் டயட்டா?
மரக்கறி உணவாளர்களுக்கு இதில் ஏதும் இல்லையா?
மறுபடியும் கூறுகிறேன்.
குறைமாவு உணவு முறையின் சித்தாந்தம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்வி எழாது. மாவுச்சத்தை குறைத்து புரதச்சத்து நிறைந்த கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமானது. மாமிசம் உண்ணாதவர்களும் பேலியோ உணவு முறையில் இருக்க முடியும். அவரவர் உண்ணும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவாறு இந்த உணவு முறையை அமைத்துக் கொள்ள முடியும்.
என்னை சந்திக்கும் பலரில் மீன் மட்டும் உண்பவர்கள் உள்ளனர் முட்டை மட்டும் உண்பவர்கள் பால் மற்றும் பால் பொருட்கள் மட்டும் உண்பவர்கள் என்று பலரும் குறை மாவு உணவு முறையில் உள்ளனர். எனவே பேலியோவை கறி தின்னும் டயட் என்ற குறுகிய கோணத்தில் அணுகுவது தவறான கோணம் என்று கருதுகிறேன். தற்கால அதீத உடல் பருமன், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய், சிறுநீரக நோய் போன்றவற்றிற்கு பெரும்பங்கு காரணம் மாவுச்சத்தை குறைக்காமல் நல்ல புரதம் உண்ணாமல் நல்ல கொழுப்பை உண்ணாமல் வெறும் உடற் பயிற்சியால் உடல் பருமனை வெல்ல முடியாது. நீரிழிவை கட்டுக்குள் வைக்க முடியாது.
தற்கால சீர்கெட்ட உணவு முறை அதிலும் மாவுச்சத்து நிரம்பிய தானியங்களை பெரிதும் நம்பியிருக்கும் நமது அன்றாட வாழ்வியல் இதனுடன் புரதம் குறைவாக உண்ணும் உணவு முறை. ஆரோக்கியமான கொழுப்புணவின் மீதும் ஏற்படுத்தப்பட்ட செயற்கையான மிகைப்படுத்தப்பட்ட பயத்தால் மிக அதிகமாக மாவுசத்தை மட்டுமே சாப்பிட்டு குழந்தைகளும் அதீத உடல் பருமனுக்கு உள்ளாகி வளர் இளம் பருவத்தில் டீன் ஏஜ் பிள்ளைகள் கூட நீரிழிவு ரத்தக்கொதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் தான் நாளைய இதய நோயர்களாகவும் சிறுநீரக நோயர்களாகவும் மாற இருக்கிறார்கள். உடனடியாக நமது உணவு முறையைப் பற்றி அதிகம் சிந்தித்து அதில் மாற்றத்தை உண்டாக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
தொகுப்பு: பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா
