*உணவு, தண்ணீர் கிடைக்காமல் பலியானதாக தகவல்
ஊட்டி : கோடை வெயிலின் தாக்கம் காரணமாக முதுமலையில் வறட்சி நிலவும் நிலையில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் கடந்த ஒரு வாரத்தில் 3 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக உள்ளது.
இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக கூடலூர் வன கோட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் கணிசமான அளவு உள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கோடை காலம் துவங்கியுள்ளது. சமவெளி பகுதிகளுக்கு நிகராக வெயிலின் தாக்கம் உள்ளது.
குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, தெப்பகாடு உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், முதுமலையில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீரின்றி வறண்டு வருகிறது. இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரின்றி கடுமையாக பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.
இந்த சூழலில் முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட பொக்காபுரம் அருகே கல்லட்டி மலைச்சரிவை ஒட்டி அடர்ந்த வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று நேற்று உயிரிழந்து கிடந்ததை ரோந்து பணியின் போது வனத்துறை பணியாளர்கள் பார்த்துள்ளனர்.
இதுதொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தெப்பக்காடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு பிரேத பாிசோதனை மேற்கொள்ளபட்டு ஆய்விற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
45 வயது ஆண் யானை என்பதும், கடும் வெயில் காரணமாக நீர் பற்றாகுறை ஏற்பட்ட நிலையில், போதிய தண்ணீர் கிடைக்காமல் உடல் சோர்வு ஏற்பட்டு இறந்திருக்கலாம். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றனர்.
இதனிடையே முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகத்திற்குட்பட்ட தெங்குமரஹாடா அருகே 47 வயது மதிக்கத்தக்க பெண் யானை, 25ம் தேதி தெப்பகாடு வனச்சரகத்திற்குட்பட்ட மாயார் நீர் வீழ்ச்சி அருகே 4 வயது ஆண் யானை குட்டி, நேற்று சிங்காரா வனச்சரகத்தில் ஆண் யானை என கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வன அலுவலர்கள் கூறுகையில், ‘‘முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவும் சூழலில் கடந்த ஒரு வாரத்தில் 2 ஆண் யானை உட்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. கடும் வெயில் காரணமாக சீகூர், ஆனைக்கட்டி ஆறுகள் வறண்ட நிலையில் தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்துள்ளன.
கோடை காலத்தில் வனத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்படுவது வழக்கம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கூடுதல் கவனம் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் அவற்றில் தண்ணீர் நிரப்ப வனத்துறை முன்வர வேண்டும்’’ என்றனர்.
