கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தேர்தல்கள் நிறைவடைந்த பிறகும், அங்கு பாஜக ஆட்சிக்கு வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி.. அதனை பொருட்படுத்தாமல், மத்தியப் படைகள் குறைந்தது மேலும் ஏழு நாட்களுக்கு அம்மாநிலத்திலேயே தொடர்ந்து தங்கியிருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தல்கள் மேற்குவங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், பல பகுதிகளை வன்குறை சம்பவங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து வாக்காளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில், மேற்கு வங்கத்தின் பெஹாலா பகுதியில் நடைபெற்ற ரோட் ஷோவின் போது இந்த அறிவிப்பை அமித்ஷாஞ் வெளியிட்டார். மேற்குவங்க மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல் வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பெஹாலா புர்பா மற்றும் பெஹாலா பஸ்சிம் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு திறந்தவெளி வாகனத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாலைவலமாக சென்றார். அப்போது, சாலையின் இருபுறமும் கூடியிருந்த பாஜக ஆதரவாளர்கள் கையசைத்தும் மலர் தூவியும் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அமித்ஷா இங்கே தேர்தல் முடிந்த பிறகும் கூடுதல் நாட்கள் மத்திய படைகள் மாநிலத்தில் முகாமிட்டிருக்கும் என்று உறுதிபட கூறினார். மேலும், வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
பெஹாலாவில் நடைபெற்ற ஒரு பிரச்சார பேரணியில் பேசிய அவர் “சகோதர சகோதரிகளே, வரும் 29-ஆம் தேதி அச்சமின்றி சென்று வாக்களியுங்கள். ரவுடிகளை கண்டு அஞ்ச வேண்டாம். தேர்தலுக்கு பின்னரும், மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய மத்தியப் படைகள் முகாமிட்டிருப்பது கூடுதல் நாட்களுக்கு நீடிக்கும் என்று மீண்டும் வலியுறுத்தி தெரிவித்தார். தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இதனிடையே மேற்குவங்கத்தின் மற்றொரு பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித்ஷா, திரிணாமுல் காங்கிரஸ் அரசின் மீதான தனது தேர்தல் பிரச்சாரத்தின் வீரியத்தை அதிகரிக்கும் வகையில், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என்றும், மாநிலத்தில் நிலவும் குண்டர் ஆட்சி மற்றும் சிண்டிகேட் ஆட்சி ஆகியவை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது.
