இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தயாராகும் மே.வங்கம் – 100 நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதால் பரபரப்பு

கொல்கத்தா: வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலின் போது, ​​சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எவ்விதமான குறைபாடுகளும் ஏற்பட கூடாது என கொல்கத்தா காவல்துறைக்கும், சவுத் 24 பர்கானாஸ் (South 24 Parganas) மாவட்டக் காவல்துறைக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாக்காளர்களை மிரட்டுதல் அல்லது வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வெடிபொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற சம்பவங்களை அலல்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கையாள்வதில் அதிகாரிகள் எவரேனும் அலட்சியமாக செயல்படுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ஒருவரின் வீட்டிலிருந்து, சுமார் 100-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறை கைப்பற்றிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாங்கர் (Bhangar) பகுதியில் வசிக்கும் ரஃபிகுல் இஸ்லாம் என்பவரின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், வெடிபொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிந்து கைது செய்ய, மாநில காவல்துறை ஒரு சிறப்பு நடவடிக்கையை தொடங்க அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி தங்கள் வாக்குகளைச் செலுத்துதை உறுதி செய்யும் வகையில், பதற்றமான பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் அப்பகுதியைத் தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது. முன்னதாக காஷிப்பூர் பகுதியில் ஒரு இடுகாட்டிற்கு அருகே உள்ள ஆட்கள் யாரும் வசிக்காத வீட்டில் இருந்து, 79 நாட்டு வெடிகுண்டுகளும் பல்வேறு வெடிபொருட்களும் (வெடிமருந்து, கந்தகம்) கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாரூய்பூர் மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தை சோதித்த போது 79 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. தற்செயலாக அவை வெடிக்காமல் இருக்க சம்பவ இடத்திலேயே வெடிகுண்டு குவியலைச் செயலிழக்கச் செய்ய வெடிகுண்டு செயலிழப்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க மாநிலச் சட்டமன்றத்திற்கான தேர்தலின் முதற்கட்ட வாக்கு பதிவு கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது, இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: