‘பில்லி சூனியம்’ அகற்றுவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: போலி சாமியார் அதிரடி கைது

 

 

நாசிக்: பில்லி சூனியத்தை அகற்றுவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் நிபாட் தாலுகாவிற்கு உட்பட்ட தரன்கான் கிராமத்தில்  தத்தா தேவஸ்தான் மடம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டில் குடும்ப பிரச்னை காரணமாக 28 வயது இளம்பெண் ஒருவரை அவரது பெற்றோர் அந்த மடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த பெண்ணிற்கு யாரோ ‘செய்வினை’ வைத்திருப்பதாகவும், அதனை அகற்றுவதாக போலி சாமியார் மகேஷ் காக்டே என்ற மகேஷ் கிரி நம்ப வைத்துள்ளார்.

இதனைப் பயன்படுத்தி, அந்த பெண்ணை ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியதோடு, செல்போன் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பயத்தின் காரணமாக முதலில் புகார் அளிக்காத நிலையில், பின்னர் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 23ம் தேதியன்று போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ் கிரியை கைது செய்தனர்.

கைதான சாமியாரை வரும் 29ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நாசிக்கில் அசோக் காரத் என்ற சாமியார் மீது இது போன்ற பாலியல் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது மற்றொரு சாமியார் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: