புதுடெல்லி: சி.ஏ.ஜி., அறிக்கையில் ஒன்றிய பாஜக அரசின் பிரம்மாண்ட நிதி முறைகேடு அம்பலமாகியுள்ளது. செலவின கணக்கில் வராத ரூ.54,282 கோடி நிதி எங்கே? என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. ஒன்றிய பாஜக அரசு தனது நிர்வாகத்தில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அரசு திட்டங்களுக்கு செலவிடப்படும் நிதிக்கு முறையாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய பயன்பாட்டுச் சான்றிதழ்கள், முறையாக தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. நிதி ஒழுங்குமுறைகளை பின்பற்றாமல் ஒன்றிய அரசு மெத்தனமாக செயல்படுவது, மக்களின் வரிப்பணத்தை பாதுகாப்பதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.
இந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.,) அறிக்கை, ஒன்றிய பாஜக அரசின் நிதி குளறுபடிகளை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. சுமார் 54,282.32 கோடி ரூபாய் செலவினங்களுக்கு எவ்வித கணக்குகளும் இல்லை என்று அந்த அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தற்செயலாக நடந்த தவறு என்பதை விட, திட்டமிட்ட நிதி முறைகேடாகவே பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை கணக்கில் காட்டாமல் மறைத்திருப்பது, பொதுப்பணத்தை கையாளுவதில் பாஜக அரசு கொண்டுள்ள நேர்மையற்ற போக்கை பிரதிபலிக்கிறது.
தணிக்கை அறிக்கையின் விவரங்கள் குறித்து கடந்த 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெலுங்கானா சி.பி.ஐ. (எம்) பிரிவு முக்கிய விமர்சனத்தை முன்வைத்தது. ‘ஒன்றிய திட்டங்களின் கீழ் ஒதுக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பொறுப்பற்ற செயலாகும்’ என்று அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் 15 அமைச்சகங்களில் மொத்தம் 33,973 பயன்பாட்டுச் சான்றிதழ்கள் நீண்டகாலமாக நிலுவையில் இருப்பது, நிர்வாக ரீதியான மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது. மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதி, எங்கு சென்றது என்றே தெரியாத மர்மமான சூழலை மோடி அரசு உருவாக்கியுள்ளது.
தணிக்கை அறிக்கையின்படி, கடந்த 23ம் தேதி வெளியான தரவுகள் மேலும் பல உண்மைகளை உடைத்துள்ளன. இதில் குறிப்பாக வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 18,273 கோடி ரூபாய்க்கும், உயர்கல்வித் துறைக்கான 14,360 கோடி ரூபாய்க்கும் முறையான ஆவணங்கள் இல்லை. மேலும், மற்ற அமைச்சகங்கள் வாயிலாக 21,649.32 கோடி ரூபாய் நிதி கணக்கில் காட்டப்படவில்லை. இது தவிர, 12,754 கோடி ரூபாய் நிதி தவறான கணக்குத் தலைப்புகளின் கீழ் மாற்றப்பட்டுள்ளதுடன், 9,222 கோடி ரூபாய் வரிப்பணம் உரிய காலத்திற்குள் மாற்றப்படாமல் ஒன்றிய அரசிடமே தேங்கி முடங்கியுள்ளது.
இந்த இமாலய ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வரும் போதிலும், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எவ்வித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிதி மேலாண்மையில் இவ்வளவு பெரிய ஓட்டைகள் இருப்பதை சி.ஏ.ஜி., சுட்டிக்காட்டிய பின்பும், ஒன்றிய பாஜக அரசு வாய் திறக்க மறுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். மக்களின் வரிப்பணத்தை முறைகேடாக கையாண்டு வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள், நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
