ஏஐ தொடர்பான 3 புதிய படிப்புகள்: சென்னை ஐஐடி ஸ்வயம் பிளஸ் தளத்தில் அறிமுகம்

சென்னை: சென்னை ஐஐடி ஸ்வயம் பிளஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான 3 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஐஐடி பிரவர்டக் டெக்னாலஜீஸ் பவுன்டேஷனுடன் இணைந்து அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு பிரசாரத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான 3 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் பொறியாளர்களுக்கான ஏஐ, நிர்வாகிகளுக்கான ஏஐ, பொறியியல் தூண்டல் ஆகிய மூன்று பாடங்களும் தொடக்கநிலை மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சேர கோடிங் அல்லது ஏஐ குறித்த அனுபவம் எதுவும் தேவையில்லை.
பொறியியல் ஆர்வலர்களுக்கான ஏஐ பாடப்பிரிவு, பள்ளிக்கல்வியில் இருந்து பொறியியல் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை திறன்களை வழங்கக்கூடியதாக இருக்கும்.

பொறியியல் தரவு தொகுப்புகளைக் கொண்டு பைதான், ஏஐ, இயந்திர கற்றல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். அதேபோல், நிர்வாகிகளுக்கான ஏஐ பாடப்பிரிவு மேலாண்மைத் துறையில் உள்ள வல்லுநர்கள், ஏஐ, மெஷின் லேர்னிங் ஆக்கமுறை ஏஐ ஆகியவற்றை பயன்படுத்தி தெளிவான முடிவுகளை எடுக்க உதவும். பொறியியல் தூண்டல் பாடப்பிரிவு, துல்லியமான முடிவுகளைப் பெறுவதற்கு ஏஐ அமைப்புகளுடன் திறம்பட உரையாடுவதற்கான பயிற்சியை கற்றுத்தரும். இந்த ஏஐ பாடப்பிரிவுகளில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 10ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என ஐஐடி அறிவித்துள்ளது.

Related Stories: