கையில் மை வைத்துவிட்டு ஓட்டு போடாமல் சென்ற மநீம மாநில செயலாளர்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரர் எஸ்கேபி.கோபிநாத். நேற்று முன்தினம் வாக்களிக்க காஞ்சிபுரம் தும்பவனம் தெருவில் உள்ள தங்கவேலர் நகராட்சி உயர் நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு கையில் மை வைத்த பிறகு வாக்களிக்காமல் திரும்பி சென்று விட்டார். இதனால் வாக்குச்சாவடி அலுவலர், உங்கள் வாக்கை பதிவு செய்யாமல் போகிறீர்கள் என்பதற்கு அடையாளமாக ஆவணத்தில் கைவிரல் ரேகை, கையொப்பமிடவேண்டும் என கூறியுள்ளார்.

அதன்படி ஆவணத்தில் கைவிரல் ரேகையை பதிவு செய்தும் கையொப்பமிட்டும் வெளியில் வந்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘அரசு ஊழியர்கள் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதியளிக்கிறது. ஆனால். தனியார் நிறுவன ஊழியர்கள் சொந்த ஊருக்கு சொந்த செலவில் சென்றுதான் வாக்களிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. இதனால் வாக்களிக்க செல்லும் தனியார் நிறுவன ஊழியர்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் முன்பதிவு செய்ய முடியாமலும், சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.

எனவே அரசு ஊழியர்களை போல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தபால் வாக்களிக்க வாய்ப்பு தரவேண்டும் என கடந்த 6 மாதத்துக்கு முன்பே கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு தேர்தல் ஆணையம் எந்த பதிலும் தரவில்லை. எனவே எனது மனஉளைச்சலை வெளிப்படுத்த கையில் மை வைத்த பிறகு வாக்களிக்காமல் திரும்பிவிட்டேன்,’ என்றார்.

Related Stories: