சென்னை: விளாங்காடுபாக்கம் மற்றும் சிறுங்காவூர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்.செல்வம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருவள்ளூர் மாவட்டம், விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், 100 ஏக்கருக்கு மேல் சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் சில நிலங்களுக்கு வருவாய் துறை பட்டா வழங்கியுள்ளது. அந்த நிலங்களில் கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. விளாங்காடுபாக்கம் மற்றும் சிறுங்காவூர் கிராம சர்வே எண்களில் சட்டத்துக்கு புறம்பாகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போலியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுதால் அந்த போலி பத்திரப்பதிவை ரத்து செய்து, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக் கோரி கடந்த 2023 ஏப்ரல் 21ல் திருவள்ளூர் மாவட்ட பதிவாளருக்கு மனு அளித்தேன். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி கடந்த 2024ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எனது புகார் மனுக்களை பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதுகுறித்து மனுதாரருக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அரசுக்கு சொந்தமான நிலங்கள்தான் என்று தெரிந்தே விதிகளுக்கு புறம்பாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
எனவே, அந்த நிலங்களின் பத்திரப்பதிவை ரத்து செய்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள், அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி அறிக்கை அளித்திருந்தார். எனவே, மாவட்ட பதிவாளரின் உத்தரவின்படி அடிப்படையில் பத்திரப்பதிவு தலைவர், மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருவாய் துறை அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில், ஆய்வு மற்றும் அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருவாய் துறையின் அறிக்கையின் அடிப்படையில் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளன. எனவே, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை ஆறு மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
