சிவகங்கை: சிங்கம்புணரி அருகே ஐந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த விறகு வெட்டும் தொழிலாளிக்கு 5 தூக்கு தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மருதிபட்டியை சேர்ந்தவர் சந்திரன்(49). விறகு வெட்டும் தொழிலாளி. திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர், கடந்த 2023ம் ஆண்டில் இருந்து பல்வேறு காலக்கட்டத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தந்தை கடந்த 2024, பிப்ரவரி மாதம் திருப்புத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர், இது போல் மேலும் நான்கு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கடந்த 3.2.2024ல் சந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையிலேயே இருந்து வருகிறார்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனலெட்சுமி ஆஜரானார். வழக்கை விசாரித்த போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன் குற்றம்சாட்டப்பட்ட சந்திரனுக்கு 5 மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது: பாதிக்கப்பட்ட சிறுமிகள் வீட்டின் முன்பு விளையாடியபோது சந்திரன் அவர்களை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களுக்கு வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளை காண்பித்து விளையாடச் செய்துள்ளார். சிறுமிகளுக்கு தேவையான தின்பண்டங்கள் கொடுத்து அவர்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அவ்வப்போது சிறுமிகளுக்கு ரூ.20 பணம் கொடுத்துள்ளார். அரிதிலும் அரிதான இந்த வழக்கில் தைரியமாக வந்து புகார் அளித்த சிறுமியின் தந்தை, நீதிமன்றத்தில் உண்மையை கூறிய சிறுமிகள் ஆகியோருக்கு இந்த நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு சிறுமிகளை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம், ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ஐந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு தனித் தனியாக சாகும் வரை நான்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
மேலும் 12 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 5 மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது. அனைத்து தண்டனை யையும் இவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மரண தண்டனை வழங்குவதாக தீர்ப்பு கூறி முடித்ததும் நீதிபதி தீர்ப்பு எழுதிய பேனாவின் முனையை உடைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் போக்சோ வழக்கில் மரண தண்டனை வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, கடந்த 6ம் தேதி சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கைதான குற்றவாளிகளான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்தது. 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட 18 நாட்களுக்குள் சிவகங்கை போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* போக்சோ வழக்குகளில் இதுவரை தூக்கு…
* நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது இரண்டாவது மனைவியின் 15 வயது மகளை கடந்த 2024ல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்த நெல்லை ேபாக்சோ நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கியது. இதே நீதிமன்றம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தனது 9ம் வகுப்பு படிக்கும் மகளை மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கிலும் மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
* கோவை துடியலூர் பகுதியில் 6 வயது சிறுமியின் கை, கால்களை கட்டிப்ேபாட்டு பலாத்காரம் செய்த வழக்கில் சந்தோஷ்குமார் என்பவருக்கு கடந்த 2019ல் கோவை போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
* கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் பீகார் மாநில தொழிலாளியின் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமியை கொலை செய்து உடலை சாக்குப் பையில் போட்டு கட்டி காட்டுப்பகுதிக்குள் போட்டு சென்ற வழக்கில், கைது செய்யப்பட்ட அசாபக் அலாம் என்பவருக்கு போக்சோ நீதிமன்றம் கடந்த 2023ல் மரண தண்டனை வழங்கியது.
* சென்னை மாங்காடு மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 6 வயது சிறுமி கடந்த 2017ம் ஆண்டு மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மென்பொறியாளருக்கு மரண தண்டனை வழங்கியது. இதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்தது.
* சிறுமிகள் வீட்டின் முன்பு விளையாடியபோது சந்திரன் அவர்களை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களுக்கு வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளை காண்பித்து விளையாடச் செய்துள்ளார்.
* சிறுமிகளுக்கு தேவையான தின்பண்டங்கள் கொடுத்து அவர்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவ்வப்போது சிறுமிகளுக்கு ரூ.20 பணம் கொடுத்துள்ளார்.
