சென்னை: இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கடந்த 2016ம் ஆண்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் 2016 செப்டம்பர் மாதம் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், சென்னை காவல் ஆணையரிடம் அறிக்கை கோரியது. ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்று முடிவுக்கு வந்த ஆணையம், வழக்கை கடந்த 2020 மே மாதம் முடித்துவைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமாரரின் தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், எந்த விசாரணையும் நடத்தாமல் சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ராம்குமார் மரணம் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.டி.பாலாஜி, ஆணையத்தின் புலன்விசாரணை பிரிவின் அறிக்கை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்தது உறுதியானதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக தெரிவித்தார். தமிழக காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், இதே விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2024ல் ரத்து செய்துள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவல்துறை, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சரிதான். அதில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறி ராம்குமாரின் தந்தை பரமசிவம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
