புதுச்சேரி: புதுவை அருகே கோட்டக்குப்பத்தில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டி வாகனங்களை இடித்து தள்ளிய சுற்றுலா பயணியை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பம் சின்ன முதலியார்சாவடி கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த பகுதி புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இச்சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை பதிவெண் கொண்ட கருப்பு நிற கார் ஒன்று தாறுமாறாக சென்றது.
அத்துடன் அங்கிருந்த இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளியபடி அந்த கார் சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து, கோட்டக்குப்பம் வாகன சோதனைச்சாவடியில் தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது அந்த கார், அங்கேயும் ஒருசில பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்று கொண்டிருந்த அந்த காரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடிக்க முயற்சித்தனர். ஆனால் காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் மரக்காணம் அருகே காரை வழிமறித்த பொதுமக்கள் காரில் இருந்த 2 ஆண் மற்றும் 2 பெண்களை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மரக்காணம் போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், காரில் இருந்தவர்கள் சென்னையில் இருந்து பிறந்தநாளை கொண்டாட புதுச்சேரிக்கு வந்து மது அருந்திவிட்டு, போதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியை சேர்ந்த முகிலன் (22), தூத்துக்குடியை சேர்ந்த திவாகர் (22), செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியை சேர்ந்த நிதி (20), செங்கல்பட்டை சேர்ந்த அதிமேகா (20) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் காரை தாறுமாறாக ஓட்டி சென்றதில் 5 பேர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
