தஞ்சாவூர் எஸ்பி மீதான முறைகேடு வழக்கு நேர்மையான அதிகாரிகளுக்கு எப்போதும் துணை நிற்போம்: ஐகோர்ட் கிளையில் அரசு வாதம்

மதுரை: நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தஞ்சாவூர் மாவட்ட எஸ்பியாக ஆசிஷ் ராவத் 2023ல் பணியாற்றினார். அப்போது காவலர் குடியிருப்பில் தேக்கு உள்ளிட்ட மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டன. குடியிருப்பு கட்டிடங்கள் தொடர்பான கட்டுமான டெண்டர் விடுவதில் விதிகளை முறையாக பின்பற்றவில்லை. காவலர்கள் நலன் சங்கம் பொது நிதியில் முறைகேடு நடந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஆசிஷ் ராவத் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தஞ்சை நீதிமன்றம், புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் ஆசிஷ் ராவத் மீது வழக்கு பதிய வேண்டும் என உத்தரவிட்டது. தஞ்சை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தஞ்சாவூர் எஸ்பி ஆகியோர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி, ‘‘சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் வழக்கு பதிய கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட எஸ்பி அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. அரசின் முன் அனுமதியின்றி அரசு ஊழியர் மீது விசாரணை நடத்த முடியாது. நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு துணை நிற்கும்’’ என்றார். கார்த்திகேயன் தரப்பில், ‘‘கீழமை நீதிமன்ற உத்தரவு சரியே. அரசின் முன் அனுமதி தேவையில்லை’’ என கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதி, தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Related Stories: