ரூ.300 கொடுங்க, உள்ள மொபைல் எடுத்துட்டு போங்க.!! தேர்வு மையத்தில் நடந்த முறைகேடு.. வெளியான வீடியோ

மகாராஷ்டிராவின் சந்திரப்போர் பகுதியில் நடைபெற்ற பிஏ குடிமைப்பணி தேர்வில் (BA Civil Services examination) மாணவர்கள் தங்கள் மொபைலை பார்த்து பதில் எழுதும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்வு செயல்முறையின் நேர்மை மற்றும் மத்திய அதிகாரிகளின் பங்கு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனமான சர்வோதயா கல்லூரியில் கடந்த ஏப்ரல் 22 அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, மாணவர்கள் தேர்வின் போது மொபைல் போன்களை எடுத்து சென்று பயன்படுத்த ரூ.300 லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. கேட்ட பணத்தை கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுமே கொடுத்த நிலையில், அவர்கள் அனைவரும் தேர்வு நடந்த அறைக்குள் தங்களின் மொபைலை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பார்த்து எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் வீடியோவில், மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி, தங்கள் மொபைல்களை வெளிப்படையாக வைத்து கொண்டு, கூகுளில் விடைகளைத் தேடி, அவற்றை தங்கள் விடைத்தாள்களில் எழுதுவது அப்பட்டமாக தெரிகிறது.

மேலும் குறிப்பிட்ட அந்த தேர்வு மையத்தில் நிலவும் மோசமான உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அந்த தேர்வு மையத்தில் சுமார் 400 மாணவர்கள் தேர்வு எழுதுவதாகவும், ஒரே இருக்கையில் மூன்று மாணவர்கள் வரை அமர்வதாகவும் கூறப்படுகிறது. இட நெருக்கடி காரணமாக, பல மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த மோசடி ஏதோ ஒரு சாதாரண பள்ளி அல்லது கல்லூரி தேர்வில் நடக்கவில்லை, மாறாக பி.ஏ. குடிமைப் பணித் தேர்வின் போது நடந்ததுள்ளது. எதிர்காலத்தில் நிர்வாக அதிகாரிகளாக வேண்டும் என்று கனவு காணும் மாணவர்கள், ஊழல் மற்றும் மோசடியின் மீது தங்கள் அடித்தளத்தை அமைத்துள்ளதை இந்த வீடியோ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த வீடியோ எப்படி வெளிவந்துள்ளது என்றால் ரூ.300 பணம் கொடுக்க மறுத்து, தங்கள் சொந்தத் தகுதியின் அடிப்படையில் தேர்வை எழுத விரும்பிய மாணவர்கள் மூலமாக தான். அவர்கள் தான் இந்த ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்பி, இவ்விஷயத்தை அம்பலப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories: