152 எம்எல்ஏ பதவிக்கு 1,478 வேட்பாளர்கள் போட்டி; மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் வாக்களிப்பு

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 152 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வடக்கு வங்காளத்தில் உள்ள 54 தொகுதிகள் மற்றும் முர்ஷிதாபாத், பீர்பும், மெதினிபூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளில் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். முதல்கட்ட தேர்தலில் சுமார் 3.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசின் ஆயுதப்படை போலீசார் சுமார் 2.4 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் உள்ள 44,376 வாக்குச்சாவடிகளில் 7,384 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீதம் வெப்காஸ்டிங் வசதி செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரலையாக கண்காணிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பவித்ரா கார் போட்டியிடுகிறார். அதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 30 ஆண்டுகளுக்குப் பிறகு பஹரம்பூர் சட்டசபை தொகுதியில் களம் காண்கிறார். நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் தொகுதிகளில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, நந்திகிராமில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பவானிப்பூரில் களம் காணும் அவர் வாக்குப் பதிவு செய்த பின் கூறுகையில், ‘நிச்சயமாக ஆட்சி மாற்றம் நடக்கும். இந்த முறை மாற்றம் ஏற்படாவிட்டால் மேற்கு வங்கத்தில் சனாதனம் அழிந்துவிடும். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் ஆங்காங்கே ரவுடிகள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்’ என்றார். சில்குரியில் ஒரு சில வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வரும் 29ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். இந்த இரண்டு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 

Related Stories: