தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்ற தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு

டெல்லி: தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 வரை உயரலாம் எனப் பரவும் தகவலுக்கு பெட்ரோலிய அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியா எனவும் விளக்கமளித்துள்ளது.

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடனான போரில் ஈரான் ஹார்மூஸ் நீரினையை மூடியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆனால், இந்தியாவில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 வரை உயரக்கூடும் என தகவல் வெளியானது. இந்த தகவலுக்கு ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பெட்ரோலிய அமைச்சகத்தின் சமூக வலைதள பதிவில்;
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படக்கூடும் என்று தெரிவிக்கும் சில செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய விலை உயர்வுக்கான எந்தவொரு முன்மொழிவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இத்தகைய செய்திகள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் பரப்பப்படுபவை. இவை தீய உள்நோக்கம் கொண்டவை மற்றும் தவறாக வழிநடத்துபவை ஆகும்.

உண்மையில், கடந்த நான்கு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படாமல் உள்ள ஒரே நாடு இந்தியாதான். சர்வதேச சந்தையில் ஏற்படும் கடுமையான விலை உயர்வுகளிலிருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் அயராத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. என கூறப்பட்டுள்ளது.

Related Stories: