திமுக தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியமைக்குமா..? நிச்சயமாக வரலாறு திரும்பும் – திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையையாற்றிய பின் திமுக-வின் எம்பி-யான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சென்னை சிஐடி காலனியில் உள்ள வாக்குசாவடியில் வாக்கு செலுத்தினார் கனிமொழி. தமிழகம் முழுக்க செய்த சுற்றுப்பயணம் குறித்தும், தேர்தல் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய எம்.பி கனிமொழி, மக்கள் நிச்சயமாக ஒரு தெளிவான முடிவை எடுப்பார்கள். நான் மக்களை தொடர்ந்து சந்தித்ததன் அடிப்படையில் சொல்கிறேன், உறுதியாக திமுக ஆட்சி தொடரும் என்று மிகவும் நம்புகிறேன். நான் இத்தனை தொகுதிகள் நிச்சயமாக வெல்வோம் என்ற எண்ணிக்கைக்குள் போக விரும்பவில்லை, ஆனால் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி நிச்சயம் சிறப்பான ஒரு வெற்றியை பெறும் என்றார்.

தவெக விஜய்யின் பின்னால் பெரும்பாலான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, வாக்கு எண்ணும் நாளில் இதன் உண்மை என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியவரும் என்றார். 1971-க்கு பிறகு திமுக தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும் என்று புன்னைகைத்தப்படி பதில் அளித்தார்.

இந்த முறை தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவீதம் நிச்சயமாக உயரும் என்று தான் நம்புவதாகவும் கனிமொழி குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதே போல முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு நல்லது எது என்று சிறிது நேரம் உட்கார்ந்து சிந்தித்து, பிறகு அவர்கள் தங்கள் வாக்கினை செலுத்த கேட்டு கொண்டார்.

மாநிலத்திற்கு எது நல்லது, நம் மொழியை யார் பாதுகாப்பார்கள், நமக்கு மற்றும் நம் பிள்ளைகளுக்கு எந்த ஆட்சி வந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சிந்தித்து வாக்களிக்க, தமிழக மக்களை கனிமொழி கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories: