நாசரேத், ஏப். 23: நாசரேத் கல்லூரி மற்றும் தொழிற்பள்ளியில் உலக புவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கம் சார்பில் உலக புவி நாள் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல குருத்துவ செயலர் குருவானவர் தாமஸ் தலைமை வகித்து சிறப்புரையாற்றி மாணவ- மாணவியருக்கு பரிசு வழங்கினார். ஆக்னஸ் தாமஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் சோபியா ஞானமேரி வரவேற்றார். திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் வாழ்த்திப் பேசினார்.
இதையடுத்து மாணவ- மாணவியருக்கு உலக புவி நாள் கருப்பொருளை மையமாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் கிங்ஸ்லி சாலமோன், முதல்வர் சோபியா ஞானமேரி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். இதேபோல் நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறை சார்பில் உலக புவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் (பொறுப்பு) ஜான்சன் ஐசக் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குநர் ஜான் சாமுவேல், புவியை காப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இதையடுத்து பள்ளி மாணவர்கள் புவியை காப்பதன் நோக்கம் மற்றும் அவசியம் குறித்தான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் ஸ்டான்லி ஜான்சன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் திலகர், குருவானவர் ஜான் சாமுவேல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
