சாத்தான்குளம், ஏப். 23: பூச்சிக்காடு விளக்கு- பிரகாசபுரம் விலக்கு இடையே சாலை சேதமடைந்து காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை இடையே இடைச்சிவிளை, அரசூர் பூச்சிக்காடு விலக்கு, புதுக்கோட்டை, குமரன் நகர், பூவுடையார் புரம் விலக்கு, பிரகாசபுரம் விலக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த சாலை வழியாக ஏராளமான அரசு பஸ் மற்றும் இதர வாகனங்கள், இருசக்கர வாகனத்திலும் மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த சாலையில் எந்த நேரமும் போக்குவரத்து வசதி உள்ளது.
இந்த சாலையில் பூச்சிக்காடு விலக்கு பகுதியில் இருந்து பிரகாசபுரம் விலக்கு பகுதி வரை சாலையில் இடை இடையே விரிசல் ஏற்பட்டு சிறுசிறு பள்ளங்கள் தோன்றி காணப்படுகிறது. இந்தப் பள்ளங்கள் பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் வரும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு இடமளிக்க முற்படும்போது சிறிய பள்ளத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் விபத்தில் சிக்கி பலர் காயமடைகின்றனர். இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள், இந்தப் பள்ளங்களை அறியாமல் தடுமாறி விழுந்து காயமடையும் நிலையும் உள்ளது. பூச்சிக்காடு விலக்குக்கு முந்திய பகுதியில் புகார் தெரிவித்ததன் பேரில் சில இடங்களில் சாலை பணியாளர்கள் தார் பூசி ஒட்டுப்போட்டு உள்ளனர். எனவே பெரும் விபத்து நிகழும் முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பூச்சிக்காடு விலக்கு பகுதியில் இருந்து சாலையில் பல இடங்களில் காணப்படும் சிறுசிறு குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
