தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார்

தென்காசி, ஏப்.23: தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1680 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,72,940 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 6,22,003, பெண் வாக்காளர்கள் 6,50,767, மூன்றாம் பாலினத்தவர் 170. தென்காசி மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் பணிக்காக 8,064 அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 பணியாளர்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, கூடுதலாக 20 சதவிகித பணியாளர்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இவர்களுக்கான பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முதியவர்கள் (85 வயதுக்கு மேற்பட்டோர்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி வழங்கப்பட்டு 5923 வாக்காளர்கள் மேற்படி வசதியினை பயன்படுத்தி உள்ளனர். இதில் வாக்களிக்காத வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல அரசு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், மூத்த குடிமக்களும் தேர்தல் நாளன்று பொதுவரிசையில் காத்திருக்க தேவையின்றி அவர்களுக்கென்று தனி வரிசையில் சென்று வாக்களிக்கலாம். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், நிழற்குடை கழிப்பறை மற்றும் சாய்தள வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அடிப்படைவசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுமைக்கும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 115 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு அவற்றுக்கு மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இன்று வாக்குப்பதிவு நிறைவுற்ற உடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்று வாக்கு எண்ணிக்கை மையமான ராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவன வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கு தயார் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் ஒப்படைப்பார்கள்.

Related Stories: