தேர்தல் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை

தூத்துக்குடி, ஏப். 22: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நாளை(23ம் தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகளின்படி நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் விஷூ மகாஜன் கூறியிருப்பதாவது: நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்துள்ளது. எனவே வாக்குப்பதிவு முடியும் வரை ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், திரைப்படங்கள் அல்லது மின்னணு சாதனங்கள் மூலம் பிரசாரம் செய்யக் கூடாது. இசை கச்சேரிகள், நாடகங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். தொகுதியின் வாக்காளர் அல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பிரசார அமைப்பாளர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் இதற்கான சோதனைகளை காவல் துறை தீவிரப்படுத்தும்.

தேர்தல் பரப்புரைக்காக வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் ரத்து செய்யப்படுகின்றன. வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர், அவரது முகவர் மற்றும் கட்சிப் பணியாளர்களுக்கு தலா ஒரு வாகனம் மட்டுமே உரிய அனுமதியுடன் அனுமதிக்கப்படும். வாக்காளர்களை அழைத்து வர எவ்வித வாகனங்களையும் பயன்படுத்தக் கூடாது. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே தற்காலிக அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு குற்றப் பின்னணி இல்லாத 2 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற 3,642 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக ரூ.2.15 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: