தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்; தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

 

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதையடுத்து தலைவர்கள் இன்றும், நாளையும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி (வியாழன்) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது.

ஏப்ரல் 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவி வருகிறது. இந்த முறை 100 சதவீத வாக்கு சதவீதத்தை எட்டுவதற்கு தேர்தல் ஆணையம் தகுந்த விழிப்புணர்வு பிரசாரங்களையும் முன்னெடுத்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக பிரசாரம் நடந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் பிரசாரம் செய்கிறார். நாளை, தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், விஜய் சென்னை நந்தனத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள். நாளை (21ம் தேதி) மாலை 6 மணியுடன் அனைத்துக்கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை நிறுத்திவிட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது. வீடு வீடாக சென்று வேட்பாளர்கள், தலைவர்கள் வாக்கு கேட்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் 21ம் தேதி மாலை 6 மணியுடன் தொகுதியை காலி செய்துவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபங்களில் போலீசார் சோதனை நடத்தி சம்பந்தம் இல்லாத நபர்களை தொகுதியை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வருகிற 23ம் தேதி (வியாழன்) தமிழகத்தில் 234 தொகுதியிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 22ம் தேதி (புதன்) மதியத்திற்கு மேல் தமிழகத்தில் மொத்தமுள்ள 75,065 வாக்குச்சாவடி மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு தொகுதிகளுக்கு என தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல குழுவினர் கொண்டு வந்து, பொருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். வாக்குப்பதிவு நாள் அன்று பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் விவி-பேட் இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், படம், சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் 20 சதவீதம் மின்னணு எந்திரங்கள் கூடுதலாக வைக்கப்பட்டு இருக்கும். ஏதாவது மிஷின் பழுது ஏற்பட்டால் உடனடியாக பெல் இன்ஜினியர்கள் மூலம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் மட்டும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என சுமார் 4 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 350 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் (சுமார் 32 ஆயிரம்) தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 22ம் தேதி மதியத்திற்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவ வீரர்கள் மற்றும் அதிக போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

சுமார் 50 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, நேரடியாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் இண்டர்மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவுகள் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். தமிழகத்தில் மொத்தமாக 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேரும், பெண்கள் 2 கோடியே 93 லட்சத்து 04 ஆயிரத்து 905 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 728 பேரும் உள்ளனர். இந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்ககூடியவர்கள் அதாவது 18 முதல் 19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 14 லட்சத்து 59 ஆயிரத்து 039 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி (வியாழன்) பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அன்றைய தினம் இரவு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டிராங்க் ரூமில் வைக்கப்படும். இதைத்தொடர்ந்து 10 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, மே மாதம் 4ம் தேதி (திங்கள்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அன்றைய தினம் காலை 9 மணிக்கு முதல் சுற்று முடிவு மற்றும் முன்னணி நிலவரம் தெரியவரும். தேர்தல் பிரசாரம் ஓய்ந்தவுடன், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருக்கிறது. தமிழகம் முழுவதும் 75,065 வாக்குசாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது. இந்த வாக்குசாவடிகளுக்கு மின்னணு ஏந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தொடங்க இருக்கிறது. வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணியும் தொடங்கி உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

Related Stories: