மேற்குவங்கத்தில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு; 152 தொகுதிகளில் 66 தொகுதிகள் ‘ரெட் அலர்ட்’: இன்றுடன் பிரசாரம் ஓய்வதால் பலத்த பாதுகாப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவிற்கான 152 தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அட்டவணை முன்னதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவிய சூழலில், இந்தாண்டு தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ளது.

இந்த தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தனது மாநிலத்தின் சமூக நலத்திட்டங்களை முன்வைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. மறுபுறம், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆட்சிக்கு எதிரான மனநிலையை முன்னிறுத்தி பாஜகவின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் தங்களது ஆதரவாளர்களை திரட்டும் பணியில் கடந்த சில வாரங்களாக தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. வடவங்காளத்தின் கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி, டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 1 முதல் 76 மற்றும் 203 முதல் 258, 275 முதல் 294 வரையிலான தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப். 23) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 23.39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 167 பெண் வேட்பாளர்கள் மட்டும் களத்தில் உள்ளனர். மூன்றுக்கும் மேற்பட்ட குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடும் 66 தொகுதிகள் ‘ரெட் அலர்ட்’ தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க ஒன்றிய ஆயுதப்படை போலீசார் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் இணையதள நேரடி ஒளிபரப்பு மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று மாலை முதல் வரும் 23ம் தேதி தேர்தல் முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தல் முடிந்த பிறகு, மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வரும் 29ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Related Stories: