சென்னை: சென்னையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியினை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்கும் வகையில் பல வண்ணங்களில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் 975 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4,085 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக, மாநகராட்சி சார்பில் வாக்குச்சாவடி மையங்களில், குடிநீர் வசதி, மின் வசதி, கழிவறை, கைப்பிடியுடன் கூடிய சாய்தளம், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வசதி, வாக்காளர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியினை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்கும் வகையில் பல வண்ணங்களில் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வண்ணமிடப்பட்ட பாதைகளின் வழியே வாக்காளர்கள் செல்ல உரிய வண்ணம் கொண்ட வழிகாட்டிப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்க, மிகவும் உதவிகரமாக அமைந்திடும்.
பேருந்து வசதி:வரும் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நாள் அன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களது வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் செய்யும்போது கட்டணமின்றி பயணம் செய்யலாம். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும் பயணம் செய்யும்போது ஏதேனும் வயது சான்று மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்களை அளிக்காமல், கட்டணமில்லா பயணச்சீட்டினை நடத்துநரிடம் பெற்று பயணம் செய்யலாம்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் யூடிஐடி கார்டு மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச்சீட்டினை பெற்று பயணம் செய்யலாம். தேர்தல் நாள் 23ம் தேதி ஒரு நாள் மட்டுமே இச்சலுகையில் பயணம் செய்யலாம். இவ்வாறு மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
