ஊட்டி : பார்சன்ஸ்வேலி அணைப்பகுதியில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் 120 ஏக்கர் வனப்பகுதி நாசமாகியுள்ளது. நெருப்பை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.வனப்பரப்பு மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் உறைபனி பொழிவு நிலவும். இதனால் வனப்பகுதிகளில் பசுமை குறைந்து செடி,கொடிகள் காய்ந்து காணப்படும். மார்ச் துவங்கி மே வரை கோடை காலம் என்பதால் வறட்சியான காலநிலை நிலவும்.
இந்நிலையில் இந்த ஆண்டு சமவெளி பகுதிகளுக்கு நிகராக நீலகிரியிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. புல்வெளிகள் மற்றும் புதர்கள் காய்ந்து காணப்படுவதால், காட்டுத் தீ பரவும் அபாயம் நீடித்தது.வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நீலகிரி வன கோட்டத்துக்கு உட்பட்ட கிளன்மார்கன் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவிய காட்டு தீ சிங்காரா வரை சென்று பல ஏக்கர் வனப்பகுதி பாதிக்கப்பட்டு உள்ளது. காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
பைக்காரா மற்றும் பார்சன்ஸ்வேலி வனப்பகுதியில் நான்கு நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. காட்டு தீயை அணைக்கும் பணியில் சுமார் 200 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4 நாட்களாக இரவு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த தீயில், 120 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி சாம்பலானது. பொசுக்கும் வெப்பம், மூச்சைத் திணறடிக்கும் புகை என எதையும் பாராமல், பசுந்தழைகளை கொண்டு தீயை அணைத்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘கடும் வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம். மர்ம நபர்கள் நடமாட்டம் இந்த பகுதியில் இல்லை. 90 சதவீதத்திற்கும் அதிகமான தீ அணைக்கப்பட்டு விட்டது. விரைவில் காட்டுத் தீ முழுவதும் அணைக்கப்பட்டு விடும்’’ என்றனர்.
