பொள்ளாச்சியில் இருந்து இறக்குமதி செய்வதால் செங்கல்பட்டில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு: ரூ.100க்கு விற்பனை; பொதுமக்கள் அதிர்ச்சி

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளூர் வரத்து குறைந்து, பொள்ளாச்சியில் இருந்து இளநீர் இறக்குமதி செய்யப்படுவதால் இளநீர் விலை கிடுகிடுவென வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு இளநீர் ரூ.100க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தாகத்தைத் தணிக்க உதவும் இளநீர், மோர், கூழ், தர்பூசணி, பழஜூஸ் ஆகியவற்றின் விற்பனை களை கட்டியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இளநீரின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த இளநீர் விலை திடீர் உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகரின் உட்புறச் சாலைகளில் இளநீர் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் விலையைக் கேட்டாலே பொதுமக்களுக்கு தலை சுற்றுகிறது. 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட இளநீர் தற்போது 80 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய அளவிலான இளநீர் தற்போது 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு குறித்து செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் கூறுகையில், செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டு இளநீர் வரத்து பாதியாக குறைந்துவிட்டது.

தென்னை மரங்களில் ஏறி இளநீர் பறிக்கும் தொழிலாளர்கள் போதிய அளவில் கிடைக்காததால், உள்ளூர் இளநீரை சந்தைப்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் இளநீர் வரத்து இல்லாத காரணத்தால் தற்போது பொள்ளாச்சியில் இருந்து இளநீர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. நீண்டதூர போக்குவரத்து செலவு மற்றும் கூடுதல் கூலி காரணமாக இளநீர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்தை போக்க இயற்கை பானமான இளநீரை நாடி வரும் சாமானிய மக்கள், ஒரு இளநீரின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இளநீர் விலை உயர்வால் அதன் விற்பனை ஓரளவிற்கு பாதிக்கப்பட்டாலும், வெயிலின் உக்கிரம் காரணமாக வேறு வழியின்றி மக்கள் அதிக விலை கொடுத்து இளநீர் வாங்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: