விருதுநகர், ஏப்.21: பட்டாசு தொழிலை பாதுகாப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்தார்.
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 25 பேரில், 24 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒருவரது உடல் மட்டும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விபத்து குறித்து நான் மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். இந்த ஆலையில் விபத்து நடந்தபோது அங்கு 36 பேர் வேலை செய்திருக்கிறார்கள். மிகப்பெரிய விதிமீறல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 12 வயது சிறுவன் ஒருவனும் ஆலைக்குள் இருந்திருக்கிறான். இது சட்டப்படி முற்றிலும் தவறானது. ஆலையின் உரிமையாளர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
