தவெக தலைவர் விஜய் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு சென்று தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று மதியம் பனையூரிலிருந்து காரில் புறப்பட்டார். அப்போது ரத்தினமங்கலத்தில் உள்ள செங்கல்பட்டு தொகுதி வேட்பாளர் தியாகு என்ற தியாகராஜன் வரவேற்பு கொடுப்பதற்காக மாலை மற்றும் வேலுடன் காத்திருந்தார். விஜய் வருவதை அறிந்த 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரத்தினமங்கலத்தில் திரண்டனர்.
பின்னர் விஜய்யின் காரை வழிமறித்து காரை விட்டு வெளியே வரும்படி தொண்டர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து வேறு வழியின்றி தவெக தலைவர் விஜய் காரின் மையப்பகுதியில் 2 முறை எழுந்து நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அப்போது அவரைப் பார்த்த உற்சாகத்தில் தொண்டர்கள் அவர் மீது மாலை மற்றும் சால்வைகளை வீசினர். இதனால் கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பொன்னேரி தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காலை 11.30 மணிக்கு வருவதாக அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணி முதலே தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பஞ்செட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கூடினர். இதனால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் விஜய் வருவதற்கு காலதாமதமாகவே ஒரு வழியாக மீண்டும் அவர்களை சாலையின் இரு பக்கமும் நிற்க வைத்தனர். ஆனால் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னை, ஆந்திரா மார்க்கமாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போனது. இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து வழக்கம்போல் நீண்ட நேரத்திற்கு பிறகு காலதாமதமாக உச்சி வெயிலில் வந்த விஜய், ஏதும் பேசாமல் கையை மட்டும் அசைத்தபடி அப்படியே சென்றார். விஜய் வந்து சென்ற பிறகு காலணிகள் அறுந்து வெயிலில் நடக்க முடியாமல் கட்சியினர் ஓட்டம் பிடித்தனர். உச்சி வெயிலின் கொடுமை தாங்காமல் பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை ஆம்புலன்சில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நிகழ்ச்சி முடிந்து பிறகு அனைவரும் செல்லும் போது அருகில் இருந்த ஒலிபெருக்கியில் எங்கள் மைக்கை தயவு செய்து கொண்டு வந்து கொடுங்கள் எனவும், தயவு செய்து செல்போனை எடுத்தவர்கள் கொண்டு வந்து கொடுங்கள் எனவும் தொடர்ந்து ஒலி பெருக்கியில் குரல் வந்து கொண்டிருந்தது.
ஆனாலும் யாரும் கண்டுகொள்ளாமல் கூட்டத்தில் இருந்து தப்பித்து வீட்டிற்கு போனால் போதும் என்று அனைவரும் எதையும் கவனிக்காமல் அங்கிருந்து சென்றனர். இதனால் விஜய்யை பார்க்க வந்த கட்சியினர் செருப்பை இழந்து கடும் வெயிலில் நடந்து செல்லக்கூடிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோன்று கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோ நேற்று நடந்தது. அப்போது, சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி குதித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.
இந்த பிரசார வாகனத்தில் கும்மிடிப்பூண்டி வேட்பாளர் விஜயகுமார், பொன்னேரி வேட்பாளர் ரவி ஆகியோர் இருந்தனர். இந்த ரோடு ஷோவிற்காக சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்தனர். மேலும் ஆபத்தான முறையில் ஜேசிபி இயந்திரத்தின் பக்கெட், வேன் மீதும், தென்னை மரத்திலும், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீதும், ஸ்பீக்கர் கம்பத்தின் மீது ஏறியும் விஜய் ரசிகர்கள் வழக்கம்போல் அலப்பறையில் ஈடுபட்டனர். அவ்வப்போது கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததால் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில் நடிகர் விஜய் ரோடு ஷோவில் கை அசைத்த படி ஒரு கிலோ மீட்டர் தொலைவில தொண்டர்களை பார்த்துவிட்டு சென்றுவிட்டார். அதேபோன்று மாலை 3 மணியளவில் செங்குன்றம் வழியாக சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை புழல் காவாங்கரை பகுதியில் 3 மணி நேரம் காத்திருந்த மாதவரம் தொகுதி வேட்பாளர் விஜய் பிரபுவை, தனது பிரசார வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திறந்தவெளியில் இருவரும் வாக்கு கேட்டு, அங்கிருந்து புழல் கேம்ப் சைக்கிள் ஷாப் மாதவரம் ரவுண்டானா வழியாக வில்லிவாக்கம் சென்றார்.
அப்போது, புழல் காவாங்கரையிலிருந்து மாதவரம் ரவுண்டானா வரை உள்ளூர், வெளியூர் ரசிகர்கள் கலந்து கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வில்லிவாக்கம் தொகுதிக்கு மாலை 3 மணிக்கு தேர்தல் பரப்புரை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்த விஜய் வாகனத்தில் மேல் நின்று கையசைத்து ஆதவ் அர்ஜுனாவுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். பின்னர் 30 வினாடிகள் வாகனத்தில் இருந்த விஜய் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி மக்கள் இருந்த இடம் நோக்கி 10 அடி நகர்ந்து சென்றார்.
அதற்குள் கூட்டம் அவரை சூழ்ந்ததால் அவருடைய பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு மீண்டும் வாகனத்தில் ஏற்றினர். இது ஒரு புறம் இருக்க விஜய் வில்லிவாக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வில்லிவாக்கம் சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளான சூழல் ஏற்பட்டது. பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டியில் சாலை வலம் சென்று பரப்புரையை தொடங்கிய விஜய் கொளத்தூர், ஆர்.கே.நகர், வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு மாலையில் நிறைவு செய்தார்.
* தோல்வி பயம் பெரம்பூரில் இன்று விஜய் பரப்புரை
தேர்தல் பரப்புரைக்கு இன்று கடைசிநாள் என்பதால் விஜய் சென்னையில் உள்ள பல்வேறு தொகுதிகளில் காலை முதலே பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார். குறிப்பாக சென்னையில் பல இடங்களில் திமுக, அதிமுக கூட்டணியை விட மிகவும் பின் தங்கியுள்ளது தவெக. பெரம்பூரிலேயே பின் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால்தான் வட சென்னையில் அவர் அதிகமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக தான் போட்டியிடும் பெரம்பூர் உள்ளிட்ட சென்னையில் உள்ள பல்வேறு தொகுதிகளில் சாலை வலம் மூலமாக பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், இறுதியாக இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
