சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 24 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேலும் 7 தொழிலாளர்கள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் என 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, பட்டாசு ஆலைகளை, தொழிலாளர்களை பாதுகாத்திருக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச இழப்பீட்டுத்தொகை வழங்கவும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
