சென்னை: எங்களது சாதனைகளே எங்களுக்கு மீண்டும் வெற்றியை பெற்றுத்தரும். கட்டங்களை தாண்டி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 2.0 என்ற குரல் ஆளுநர் மாளிகையிலே மே மாதம் ஒலிக்கும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
இந்து அறநிலையத்துறை அமைச்சரும், துறைமுகம் தொகுதி வேட்பாளருமான பி.கே.சேகர்பாபு அளித்த சிறப்பு பேட்டி:
* அறநிலையத்துறை சார்பில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு எதிரானவர்கள் என தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜ ஆளும் மாநிலங்களில் கூட இவ்வளவு கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை? இதுகுறித்து பக்தர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்த ஆட்சியைப் பொறுத்த அளவில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசு இந்த அரசு. இந்த அரசில் மதத்தால், இனத்தால், மொழியால் மக்களைப் பிளவுபடுத்த நினைக்கின்ற சக்திகளை முழுமையாக அடக்கி ஒடுக்குகின்ற இந்தியாவின் மற்றொரு இரும்பு மனிதர் வல்லபாய் படேலாக மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில், இது எல்லோருக்கும் எல்லா வகையிலும் அவரவர்கள் வழிபாட்டிற்குச் சுதந்திரமாக, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கின்ற அளவிற்கு இந்த மாநிலம் திகழும்.
மற்ற மாநிலங்களைப் போல் இனத்தால், மொழியால் மக்களைப் பிளவுபடுத்த முடியாது. தேவாலயங்கள் இடிக்கப்படுவதையோ, மசூதிகள் தகர்க்கப்படுவதையோ அல்லது இன்னார் இந்த மொழியைப் பேசுபவர்கள் என்று கூப்பிட்டு அவர்களைத் துன்புறுத்துவதோ இந்த மாநிலத்தில் நடைபெறாது. அனைத்து மதத்தினரையும் ஒன்றாகப் பாவிப்பவர், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியல் செய்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் 4600க்கும் அதிகமான திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்திருக்கின்றது. இந்த ஆட்சியை எப்படி ஆன்மிகத்திற்கு, இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று சொல்ல முடியும்?
* தமிழ்நாட்டிற்கும்-டெல்லிக்கும் இடையேதான் போட்டி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்? ஆனால், தவெக எங்களுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டியா?
முதல்வர் கூறியது போல தமிழ்நாட்டிற்கும் – டெல்லிக்கும் இடையேதான் போட்டி. எங்கள் கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே தெரியவில்லை. 75 ஆண்டுகள் பவளவிழா கண்ட இயக்கம். நல்லது – கொட்டு, தீமைகள்- நன்மைகள், புயல், வெள்ளம், இயற்கை சீற்றங்கள், தீ விபத்து, பல குடும்பங்களுடைய சூழ்நிலைகள், இவற்றை எல்லாம் அனுசரித்து மக்களோடு மக்களாக பழகியவர்களை விரும்புவார்களா? அல்லது விருந்தினர் போல எப்போவாது வீட்டிற்கு வருபவர்களை விரும்புவார்களா? ஆகவே, குடும்பமாக 75 ஆண்டுகள் பவளவிழா கண்ட இயக்கம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கிறது. எங்கள் தலைவரின் கால்படாத இடமே தமிழகத்தில் இல்லை. இன்றைய அரசியல் உலகில் மக்கள் மிகவும் தெளிவாக உள்ளார்கள். சீர்தூக்கி பார்பார்கள் தியாகத்திற்கா அல்லது வேஷத்திற்காக?. எதுவாக இருந்தாலும் எடைக்கல்லில் அதிக உயரத்தில் இருப்பவர் எங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* துறைமுகம் தொகுதியில் கணிசமாக வாழும் வடமாநிலத்தவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
சவுகார்பேட்டையைப் பொறுத்தளவு வணிகர்களுக்கு போதிய பாதுகாப்பு. எந்த வணிகருக்கு எந்த வகையான தீங்கு என்றாலும், அதில் நியாயம்தான் ஜெயிக்க வேண்டும் என்பது என்னுடைய கொள்கை. அதேபோல் தொழில் செய்வதற்கு உண்டான அனைத்து பாதுகாப்பையும் உறுதியாக இந்த 10 ஆண்டுகள் வழங்கியது போல், தொடர்ந்து முதல்வர் ஆட்சிக்கு வந்தால், தொடர்ந்து அதேபோல் பாதுகாப்பு வழங்கப்படும். அதேபோல் ஒரு பசு மடத்தை ஏற்கனவே நாம் மூலக்கொத்தளத்தில் கட்டியிருக்கின்றோம். வட மாநிலத்தவர்கள் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். நிச்சயமாக கோரிக்கை பரிசீலக்கப்படும்.
* எதிர்கட்சி வேட்பாளர் ஆன்மிக வாக்குகளைக் குறிவைத்து பிரசாரம் செய்வதை நீங்கள் ஒரு சவாலாகக் கருதுகிறீர்களா?
துறைமுகம் தொகுதிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் அவர் இவ்வாறு செய்கிறார். 10 ஆண்டுகள் இந்த பகுதி மக்களுடன் பின்னி பிணைந்துள்ளோம். இதையொல்லாம் செய்துள்ளோம் என்று சொல்லி வாக்கு கேட்க முடியாது. ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. ஆதலால் இதையெல்லாம் செய்வோம் என்றும் வாக்கு கேட்க முடியாது என்பதால் குறைகளை சொல்கிறார்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. என்னை பொறுத்தவரையில் வசவாளர்கள் வாழ்க.
* முதல்வர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய ‘செயல்வீரராக’ அறியப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதேபோல் நீங்கள் தான் சென்னையின் ஹீரோ என்று சொல்கிறார்கள். இதற்கு உங்கள் கருத்து என்ன?
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பது போல் ஒட்டுமொத்த புகழுக்கும் மையப்பொருள் தமிழக முதல்வருக்கு தான். தனிப்பட்ட வகையில் யாருக்கும் எதுவும் கிடையாது. நாங்கள் உச்சரிக்கின்ற திருமந்திரம், மூலமந்திரம் அனைத்தும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.
* நீங்கள் அமைச்சராக மாநிலம் முழுவதும் கவனம் செலுத்துவதால், தொகுதி மக்களின் குறைகளைக் கேட்கப் போதிய நேரம் ஒதுக்குகிறீர்களா?
கண்டிப்பாக. தொகுதியைப் பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சொன்னது \\”வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து மக்களுக்கும் முதல்வர் நான்தான். அனைத்து தொகுதிகளுக்கும் சீரான வளர்ச்சியைக் கண்டு, சட்டமன்ற உறுப்பினருடைய பத்து கோரிக்கைகளைப் பெற்று, நிறைவேற்றி சீரான வளர்ச்சியை முதலமைச்சர் மேற்கொண்டதால், என்னுடைய தொகுதியும் மற்ற தொகுதிகளைப் போல் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முழுமை பெற்று இருக்கிறது. எனக்கு நேரம், சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதெல்லாம் தொகுதிக்கு வருவதை நான் தவிர்த்ததே கிடையாது.
* 5 ஆண்டு திமுக ஆட்சியில் அரசு செய்த திட்டங்கள் எந்தளவுக்கு மக்களிடம் சென்று சேர்ந்து உள்ளது. தற்போது திமுக அறிவித்திருக்கும் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் என்ன வரவேற்பு உள்ளது. இது, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பதில்: நிச்சயமாக மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால் சொல்வதைச் செய்பவர், செய்வதைத் தான் சொல்பவர், சொல்லாததையும் செய்பவர் நம்முடைய முதலமைச்சர் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கின்றது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே காலையிலே எழுந்தவுடன் மகளிர்க்கு இன்ப அதிர்ச்சி ரூ.5000 அளித்து வழங்கியவர் முதலமைச்சர். ஆகவே முதலமைச்சருடைய அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு மக்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள்.
* திமுக தொடர்ந்து 2வது முறையாக தமிழகத்தில் ஆட்சி செய்தது இல்லை என்ற நிலை உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறியடிப்பாரா?
முதலமைச்சருக்கு ‘கட்டம் சரியில்லை’ என்று கூறிய வரலாறு தமிழகத்திலே உண்டு. அவருக்கு ஜாதகம் சரியில்லை என்ற வரலாறு தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறியதுண்டு. கட்டங்களை தகர்த்தெறிந்து திசைகள், கோள்கள் அனைத்தையும் துணையாகக் கொண்டு முதலமைச்சரானவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதே கூட்டம் தான் திரும்பவும் இந்த பரப்புரையை மேற்கொள்கிறது. இந்த முறையும் சொல்கிறேன், கட்டங்களைத் தாண்டி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 2.0 என்ற குரல் ஆளுநர் மாளிகையிலே மே மாதம் ஒலிக்கும். நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு என்பதை உறுதியோடு சொல்கிறோம். எங்களது சாதனைகளே எங்களுக்கு மீண்டும் வெற்றி தரும்.
* இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான உங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் என்ன?
1000 ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்களில் ரூ.560 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், 400 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத 4,332 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள், ரூ.8,436 கோடி மதிப்பிலான 8,107 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு, ஆதிதிராவிடர் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 5,000 திருக்கோயில்களுக்கும், கிராமப்புறங்களில் உள்ள 5,000 திருக்கோயில்களுக்கும் திருப்பணிகளுக்கு ரூ.212 கோடி நிதி உதவி, மயிலாப்பூரில் அய்யன் திருவள்ளுவர் திருக்கோயில் ரூ.19.17 கோடியில் கற்கோயிலாகக் கட்டப்படுகிறது.
1,055 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.8,436.31 கோடி மதிப்பிலான 8,107.03 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணி, கிராமப்புறத் திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 லட்சம் என்பது ரூ.2.50 லட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோல, திருக்கோயில் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள், வள்ளலார் முப்பெரும் விழா, அனைத்துலக வள்ளலார் மாநாடு உள்ளிட்டவை இந்து சமய அறநிலையத்துறையால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* கடந்த 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை மூலம் மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு எவ்வளவு?
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.8,100 கோடி மதிப்பில் 29,400க்கும் மேற்பட்ட கோயில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 352 பழமையான கோயில்களை அவற்றின் தொன்மை மாறாமல் புதுப்பிக்க ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன. மேலும் 8,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.8,455 கோடி இருக்கும். நவீன ரோவர் கருவிகள் மூலம் 2,38,060.24 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1,50,221 எல்லைக் கற்கள் நடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
* முதலமைச்சர் அறிவித்த ‘வட சென்னை வளர்ச்சித் திட்டம்’ வட சென்னை மக்களின் வாழ்வாதாரத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை வளர்ச்சித் திட்டம் முதலில் ரூ.1000 கோடிக்கு கொண்டு வந்தார். பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையில்லா மின்சாரம், கழிவுநீர் சீராகச் செல்ல வேண்டும், பூங்காக்களை மேம்படுத்துவது என பல்வேறு திட்டங்கள் அடங்கிய வடசென்னை வளர்ச்சித் திட்டம் ரூ.1000 கோடியில் தொடங்கப்பட்டு இன்றைக்கு ரூ.6300 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பிராட்வே பேருந்து நிலையம் ரூ.877 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு, இன்றைக்கு வேகமாக நடைபெற்று வருகின்றன. சுமார் ரூ.140 கோடி செலவில், தீவுத் திடல் நிரந்தரமாக எக்ஸிபிஷன் நடத்துவதற்காக நிரந்தர கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
