விகேபுரம், ஏப்.21: அம்பை தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தொகுதிக்குட்பட்ட விகேபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காமராஜை இழிவுபடுத்தி பேசிய யூடியூபர் முக்தார் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்வேன். பதநீரை உணவு பொருளாக சேர்ப்பதற்கு பரிந்துரை செய்வேன். ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தபடும். ஆண்டுக்கு 3சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்திலிருந்து 10% ஆக உயர்த்தப்படும். அம்மா கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும்.
தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் சீரான குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும். ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக பிரிட்ஜ் வழங்கப்படும். அனைவருக்கும் ரூ.10,000 சிறப்பு உதவித்தொகை ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும். தொகுதி மக்களுக்காக சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்தும், எனது சொந்த நிதியிலிருந்தும் மக்கள் பணி செய்வேன். தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். ஆகவே வாக்காளர்களாகிய நீங்கள் இரட்டை இலைக்கு சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்’ என்றார்.
தொடர்ந்து திராவிட பேச்சாளர் பழ.கருப்பையா அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவை ஆதரித்து பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். பிரசாரத்தில் மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, அம்பை நகர செயலாளர் அறிவழகன், நகரச் செயலாளர் கண்ணன், சேரன்மாகதேவி நகர செயலாளர் பழனிக்குமார், பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் மாரிச்செல்வம், விஜயபாலாஜி, பிராங்கிளின், அதிமுக ஜெ மாவட்ட பேரவை இணைச்செயலாளர் அருண் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
