100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நாசரேத் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாசரேத், ஏப்.21: நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நாசரேத் பொறியியல் கல்லூரியில் மாணவ- மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ- மாணவியருக்கு பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டி, கோலமிடுதல் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் தேர்தல் தொடர்பாக தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்கும் முறை பற்றியும் போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருச்செந்தூர் ஆர்டிஓ கவுதம் தலைமை வகித்து மாணவ- மாணவியரை பாராட்டி பரிசுகள் வழங்கினார். மேலும் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை செலுத்துமாறும், தேர்தலின் போது அமைதியான முறையில் வாக்கு செலுத்த வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். கல்லூரி தாளாளர் மாமல்லன், முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், கிராம உதவியாளர் சத்தியசீலன், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஞானசெல்வன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.

Related Stories: