முகுந்தனிடம் அன்புமணி பேரம்: ஆடியோ வைரல்

சட்டசபை தேர்தலில் பாமக இரண்டாக உடைந்து தேர்தலை சந்தித்து வருகிறது. மகன் அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக ராமதாசும் வேட்பாளரை களம் இறக்கியுள்ளார். இதற்கிடையே தர்மபுரியில் தேர்தல் பிரசாரத்தின் போது அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சம்யுக்தா ஆகியோர் ஜி.கே.மணியை கடுமையாக சாடினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராமதாஸ், மூத்த மகள் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தன் ஆகியோர் நிருபர்களை சந்தித்து, அன்புமணி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அன்புமணியின் மகள்கள் பொய்யான கண்ணீர் வடிப்பதாகவும், கிளிசரின் வைத்துக் கொண்டு நாடகம் ஆடுவதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். முக்கிய நிர்வாகிகளை விலைக்கு வாங்குவதற்காக அன்புமணி பேரம் பேசியதாகவும், தன்னிடமும் பேரம் பேசப்பட்டது என்றும் முகுந்தன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் முகுந்தனிடம் அன்புமணி ஆதரவு முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் பேசுவது (3 மாதத்துக்கு முன்பு) போன்ற தொலைபேசி உரையாடல் நேற்று வெளியாகியுள்ளது.

அதில், வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும், கூட்டணி குறித்து இறுதி முடிவு எட்டப்பட்டவுடன் உங்களுக்கான தொகுதி ஒதுக்கி அதில் முழு செலவையும் அன்புமணி ஏற்றுக்கொள்வதாகவும், கட்சி பதவி குறித்து பின்னர் முடிவு எடுத்து கொள்ளலாம் என அன்புமணி கூறியதாக கணேஷ்குமார் பேசுவது இடம்பெற்றுள்ளது. அன்புமணி பேரம் பேசுவதாக கூறி இந்த ஆடியோவை தேர்தல் நேரத்தில் வெளியிட்டுள்ளது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

Related Stories: