சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதியில் அபுதமமுக சார்பில் போட்டியிடும் சுரேஷை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் சசிகலா பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்தில் பேசும் போது, செங்கோட்டையனுக்கு நன்றியே இல்லை. கொஞ்சம் கூட ஈரம் இல்லை என பேசினார்.
அதை இவர் பேசலாமா? கண்ணாடியை எடுத்து தன் முகத்தை பார்த்துக் கொள்ள வேண்டாமா? நீங்க யாருக்கு துரோகம் பண்ணிட்டு, நன்றி இல்லாமல் பேசுறீங்க என்று உங்களுக்கு தெரியவில்லையா? உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த மாதிரி உள்ளவர்கள் எல்லாம், சட்டசபைக்குள் செல்வது நல்லதே கிடையாது. ஏனென்றால் அது மக்களுக்கு நல்லதல்ல.
இவரு முதல்வராக இருக்கும்போதே, கொடநாட்டிற்குள் ஆட்கள் செல்கிறார்கள். கிட்டதட்ட 45 வருடம் எங்களிடம் இருந்த வாட்ச்மேன் உள்பட எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் மனைவி குழந்தைகளுடன் செல்லும்போது விபத்தில் உயிரிழக்கிறார். டிரைவர் உயிரிழக்கிறார். இதெல்லாம் எப்படி நடக்கும்?. கொஞ்சம் யோசிச்சு பார்க்க வேண்டும். சினிமா போல டக், டக் என்ற உயிர் போகிறது. மேலே ஒருவன் இருக்கிறான். அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது.
இங்கு பதவி கொடுத்து விட்டு, ஜெயிலுக்கு சென்று சந்தோஷமாகவா இருந்தேன்? அந்த நேரத்திலயும் அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என சென்றேன். அங்குள்ள அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு ஏராளமான தொந்தரவு அளித்தனர். நான் உயிரோடு திரும்பி வந்ததே கடவுள் செயல் தான். அதுதான் உண்மை. கட்சி வீணாக சென்று விடக்கூடாது என்பதற்காக, இதை எல்லாம் பொறுத்துக் கொண்டேன். இவ்வாறு சசிகலா பேசினார்.
