மதுரை திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சமூக ஆர்வலரும், சினிமா நடிகருமான பிரகாஷ்ராஜ் நேற்று முன்தினம் இரவு, அழகரடி, தத்தனேரி அருள்தாஸ்புரம் சந்திப்பு, மந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசியதாவது: கலைஞர் இந்த நாட்டுக்கு செய்திருக்கிற பணி அதிகம். அவர் இந்த மக்களை நேசித்து, நேசித்து வாழ்ந்ததும் அதிகம். இவ்வகையில் இந்த மக்களுக்காக இன்றைக்கு, இங்கு நன்மை செய்து கொண்டிருப்பவர்களுக்காக நானும் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நான் எந்த கட்சிக்காரனும் கிடையாது. நான் எம்எல்ஏ ஆக தேவையில்லை, எம்பி ஆகத் தேவையில்லை. இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். இது மதுரையில் மட்டும் பேசுவதல்ல. தமிழ்நாட்டுக்கும் புரியணும். இன்றைய தேர்தல் 3 மாடல்களுக்கு நடுவில் நடக்கிறது. அதாவது ஒன்று திராவிட மாடல். கல்வி கொடுத்து, மொழி மற்றும் இனம் மானத்தைக் காப்பாற்ற போராடுவது. மற்றொன்று, அடிமை மாடல். இது தமிழ்நாட்டின் தன்மானத்தை, மோடியின் காலடியில் வைத்த பாஜ, அதிமுக கூட்டணி. மூன்றாவதோ சினிமா மாடல். தகுதியின்றி சினிமாவிலிருந்து வருபவர்கள்.
பாஜவை ஒரு பாம்பிற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர்களுக்கு இந்துக்கள் மேல் அன்பில்லை, அதிகாரம் தான் வேண்டும். அவர்கள் ‘டபுள் இன்ஜின்’ சர்க்கார் என்கிறார்கள். ஆனால் இன்ஜின் டிரைவர் டெல்லியில் இருப்பார். இந்த அடிமை மாடல் நமக்கு வேண்டுமா? மிஸ்டர் சுந்தர்.சி. நானும் ஒரு நடிகன்தான். நீங்கள் நாட்டுக்காக என்ன தகுதியை வளர்த்துக் கொண்டீர்கள்? எம்எல்ஏ பதவி என்பது லாட்டரி சீட்டு கிடையாது. ஒரு ஸ்கூல் டீச்சர் ஆக வேண்டுமென்றால் கூட தகுதி கேட்கிறார்கள். அரசியலுக்குத் தகுதி வேண்டாமா?
கடைசியாக ஒன்றை சொல்கிறேன் இதில் அடிமை கும்பல், சினிமா கும்பல் இருக்கே அது வேணுமா? நம்ம திராவிட மாடல் வேணுமா? அதை நீங்கள் யோசிக்கணும். இன்னொரு தடவையும் சொல்கிறேன் இது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் நடக்கும் தேர்தல் இல்லை. விஜய் சொல்றது மாதிரி, டிஎம்கேவிற்கோ, டிவிகேவிற்கோ நடக்குற தேர்தல் இல்லை. ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் நடக்கிற தேர்தல், தன்மானத்திற்கும் சுய ஆட்சிக்கும் நடக்கும் தேர்தல். மாநில உரிமைகளை காப்பாற்றுவதற்கான தேர்தல், மதுரையை வீர மண் என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கேன். தொகுதி மக்களான நீங்கள் அதை செய்து காட்டுங்கள். இவ்வாறு பேசினார்.
