கடைசி நேரத்தில் வேட்பாளர் ஓடியதால் எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு: விஜய் திடீர் அறிவிப்பு

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி சட்டமன்ற தொகுதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். விஐபி தொகுதியான இங்கு, தவெக சார்பில் அருண்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், வேட்பு மனுவை முழுமையாக நிரப்பாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், வேட்பாளர் அருண்குமாரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த தவெகவினர், அருண்குமார் அதிமுகவிடம் விலை போய் விட்டதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து, இடைப்பாடி தொகுதியில் தவெகவினரின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய், சுயேச்சை வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் நேற்று தனது எக்ஸ்தள பதிவில், ‘‘இடைப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாக பயணித்தவர் தான். எனவே, தேர்தலில் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகி பிரேம்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தை, தவெக சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.

நமது முழு ஆதரவுடன் களம் காணும் பிரேம்குமாருக்கு வாக்களிக்குமாறு கட்சியினரையும், தொகுதி மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இடைப்பாடி தொகுதியில் தவெகவின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில், இவரது வெற்றி அமையட்டும்’’ என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் தொகுதியில், சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விஜய் வெளியிட்டுள்ள பதிவு அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: