தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த 2ம்தேதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே மரக்கடையில் பிரசாரம் செய்தார். அதன்பிறகு அந்த பக்கமே போகவில்லை. இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதியம் 2.55 மணிக்கு திருச்சிக்கு வந்தார் விஜய். முன்னதாக, விஜய்யை பார்க்க விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் குவிந்ததால் விமான பயணிகளின் வாகனங்கள் வெளியே செல்ல முடியாமல் திணறியது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், தவெக தொண்டர்களை வசைபாடினர். விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதிக்கு விஜய் வந்த போது, திருச்சி- புதுக்கோட்டை சாலையில் திடீரென தடுப்புகளை தாண்டி ஏறி குதித்து தவெக தொண்டர்கள் ஓடினர். உடனே, போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது, தவெக தொண்டர்கள், காவலர் ஒருவரை கீழே தள்ளி விட்டு மேலே ஏறி ஓடினர். பின்னர், லேசான தடியடி நடத்தி போலீசார் கட்டுப்படுத்தினர். இதையடுத்து, வயர்லஸ் ரோடு பகுதியில் விஜய் ரோடு ஷோ சென்றார்.
விஜய்யை பார்க்க நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்த இளம்பெண்கள் பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்தனர். வயர்லஸ் ரோடு காமராஜர் நகர் பகுதியில் உள்ள அந்தோணியார் கோயிலில் விஜய் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். திருச்சி வயர்லெஸ் சாலை பகுதியில் உள்ள புனித அந்தோணியார் கோயில் முன்பு விஜய்யின் பிரசார வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இறங்கிய விஜய், ஆலயத்தின் உள்ளே சென்று ‘பிரேயர் ஹாலின்’ பாதி தூரத்தில் இருந்து திடீரென மண்டியிட்டு சென்றார்.
மண்டியிட்ட நிலையில் சில நிமிடங்கள் ஜெபம் செய்தார். பின்னர் எழுந்து சென்று மெழுகுவர்த்தி ஏற்றினார். தொடர்ந்து, ஆலயத்தின் பங்கு தந்தை குரு சகாயராஜை சந்தித்து சிறிது நேரம் பேசினார். பின்னர் வெளியே வந்து பிரசார வாகனத்தில் ஏறி கே.கே.நகர் நோக்கி சென்றார். முன்னதாக விஜய் ஆலயத்தின் உள்ளே இருந்த சில நிமிடங்களுக்குள் ரசிகர்கள் சர்ச் வாசலில் இருந்த சிறிய பூங்கா பகுதி வழியாக ஏறி குதித்து ஆலயத்திற்குள் வர முயற்சித்தனர். இதில் அந்த பூங்காவில் இருந்த செடிகள் தொட்டிகள் நாசமாயின.
இதைபோல், கே.கே.நகர் பகுதியில் உள்ள நூருல்ஹுதா பள்ளிவாசலுக்கு சென்ற விஜய் அங்கிருந்தவர்களிடம் பேசினார். தொடர்ந்து, கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பச்சநாச்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த விஜய், கோயில் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பின்னர், பிரசார வாகனத்தில் ஏறி விசில் அடித்து கொண்டு சென்றார். செல்லும் வழியில் குளிர்பான பாட்டில்களை விஜய் மீது வீசினர். இதில், காஜாமலை பகுதியில் குளிர்பான பாட்டில் விஜய் தலையில் விழுந்தது. இதனால் சிறிது நேரம் அவர் திகைத்து நின்றார்.
வழக்கம் போல் தவெக தொண்டர்கள், சாலை விதிகளை மீறி விமான நிலையத்தில் இருந்து விஜய்யை பின் தொடர்ந்து அட்ராசிட்டி செய்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பஸ் நிலையம் அருகில் இருந்த மாநகராட்சி கழிவறை மேல் அபாயகரமாக தொண்டர்கள் ஏறி நின்றனர். அவர்களை போலீசார் இறக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விஜய்யை பார்க்க எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை. இதனால் விஜய்யின் ரோடு ஷோ பிசுபிசுத்தது.
விஜய்யின் ரோடு ஷோவில் சுமார் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடு போயின என்பது குறிப்பிடதக்கது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு ஆதரவாக யாரும் பிரசாரம் செய்யவில்லை. இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன் கிழக்கு தொகுதியில் தவெக ரகசிய சர்வே எடுத்தது. இதில் விஜய் டெபாசிட் வாங்குவது கூட கடினம் முடிவு வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த விஜய், தொகுதி பக்கம் தலை காட்டி ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுன விரதம் போல் 2.45 மணி ரோடுஷோ மட்டும் நடத்திவிட்டு சென்று உள்ளார்.
